தமிழகம்

முத்தலாக்கை எதிர்த்த முஸ்லிம் சீர்திருத்தவாதிகள்!

ராமசந்திர குஹா

ஸ்லாமியக் குடியரசாகத் தன்னை அறிவித்துக்கொண்ட பாகிஸ்தானில் கூட முத்தலாக் முறை ஒழிக்கப்பட்டுவிட்டது, இந்தியாவில் ஏன் இன்னமும் எனும் கேள்வி நீண்ட நாட்களாக இருந்துவந்தது. அதற்குக் காரணம் இந்திய முஸ்லிம்களுக்கான தலைமை முற்போக்கானவர்கள், நவீன சிந்தனையாளர்களிடம் இல்லை, மதவாதிகளும் பிற்போக்குவாதிகளும்தான் பெரும்பாலும் அவர்களுக்குத் தலைவர்களாக இருக்கின்றனர்.

ஆனால் இதற்கு விதிவிலக்கானவர்களும் இருக்கின்றனர். மராட்டிய எழுத்தாளர் ஹமீத் தலவாய் அவர்களில் ஒருவர். முஸ்லிம்கள் தங்களுடைய முன்னேற்றத்துக்குத் தடையாக இருக்கும் சமூக, மத பழக்கவழக்கங்களைக் கைவிட வேண்டும் என்று இடையறாது பாடுபட்டார் அவர். முத்தலாக் முறைக்கு எதிராக நெடிய போராட்டத்தையும் அவர் நடத்தினார்.

1969-ல் புணே நகரில் இஸ்லாமியத் தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் தலவாய் பேசினார். “ஒவ்வொரு புது மதமும் தன்னுடைய விசுவாசிகள் பின்பற்றுவதற்காகப் புதிய விதிகளையும் நெறிமுறைகளையும் அறிமுகப்படுத்துகின்றன. நூற்றாண்டுகள் கடந்த பிறகு இந்த விதிகளும் நெறிமுறைகளும் போதவில்லை என்றாலோ, நவீன காலத்துக்குப் பொருத்தமாக இல்லை என்றாலோ, அவற்றை மறுபரிசீலனைக்கு உட்படுத்தியாக வேண்டும். மதச் சட்டமாகவே இருந்தாலும் அவற்றால் சரியாக நீதி வழங்க முடியவில்லை என்றால் அதை மாற்றியாக வேண்டும்” என்றார்.

தலவாயின் பேச்சு உள்ளூரைச் சேர்ந்த ‘தாதா மாஸ்டர்’ என்ற தலைவரை வெகுண்டெழச் செய்தது. “தலவாய், என்ன பேசுகிறீர்கள்?” என்று கோபமாக இரைந்தார். “இந்த உலகில் எது வேண்டுமானாலும் மாறலாம், மாறக்கூடாதது இஸ்லாமியச் சட்டம்” என்றார் தாதா மாஸ்டர். தலவாய் அவருக்கு மிக சாவதானமாகப் பதில் அளித்தார்.

“நாம் சுயநலப் போக்குடன் சிலவற்றை மட்டுமே நினைவில் வைத்துக்கொள்கிறோம்; இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இருந்த குற்றங்களுக்கான தனித்தனி தண்டனைச் சட்டத்தை பிரிட்டிஷ்காரர்கள் ரத்துசெய்துவிட்டார்கள். அனைவருக்கும் பொதுவான குற்றவியல் நடைமுறைச் சட்டம், தண்டனையியல் சட்டம் ஆகியவற்றை அமல்படுத்தியிருக்கிறார்கள். பிரிட்டிஷ்காரர்கள் குற்றவியல் சட்டத்தைத் திருத்திய போது நீங்கள் ஏன் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை? கையை வெட்டுவது போன்ற தண்டனைகள் ரத்து செய்யப்பட்டபோது நமக்கு இனி ஆபத்தில்லை என்று நீங்கள் மகிழ்ச்சி அடையவில்லையா?” என்று தலவாய் பேசினார்.

“பெண்களை விட ஆண்கள் சிறப்பானவர்கள் என்று இஸ்லாம் கருதுகிறது; பெண்களை நன்றாகப் பார்த்துக்கொள்வது ஆண்களின் பொறுப்பு என்று அது கூறுகிறது” என்று தாதா மாஸ்டரின் ஆதரவாளர் ஒருவர் இடைமறித்தார்.

உடனே தலவாய் அவருக்குப் பதில் அளித்தார். “இந்த விவகாரத்தில் நாம் இப்போது கவனம் செலுத்தாவிட்டால் காலம் நம்மை மன்னிக்காது. முஸ்லிம் சட்டத்தைத் திருத்தி ஆண்களையும் பெண்களையும் சமமாக நடத்தும் ஏற்பாடுகளுக்குப் பல இஸ்லாமிய நாடுகள் மாறிவிட்டன. நம் நாட்டிலும் பெண்களுடைய நலன் தொடர்பான சட்டங்கள் தவிர, பிற சட்டங்கள் மாற்றப்பட்டுவிட்டன” என்று தலவாய் சுட்டிக்காட்டினார்.

இந்த வாத, பிரதிவாதங்கள் அப்போது அதை நேரில் பார்த்தவரின் நினைவேட்டில் எழுதப்பட்டிருக்கிறது. அப்படி எழுதி வைத்தவரின் பெயர் சையத் மெஹ்பூப் ஷா காத்ரி என்கிற சையத் பாய். மதப் பழமைவாதிகளுக்கு எதிராக அவர் நிகழ்த்திய சாத்வீகப் போராட்டம் மராட்டிய மொழியில் 2001-ல் புத்தகமாக வெளியிடப்பட்டது. அந்தப் புத்தகத்தின் தலைப்பு ‘டகடாவார்ச்சி பெரணி’. அதன் பொருள் ‘பாறையில் விதைப்பது!’ மும்பையைச் சேர்ந்த ‘சமாகளீன் பிரகாஷன்’ என்ற அமைப்பு அதே புத்தகத்தை 2014-ல் ஆங்கிலத்தில் ‘முத்தலாக்குக்கு எதிராக நமது போர்’ என்ற தலைப்பில் வெளியிட்டது.

சையத் பாய் ஹைதராபாதில் பிறந்தவர், புணேயில் வளர்ந்தார். வறுமை காரணமாக 13 வயதில் ஒரு பென்சில் ஆலையில் இளம் தொழிலாளியாக வேலைக்குச் சேர்ந்தார். அவருடைய அக்கா கதீஜா, முத்தலாக் காரணமாகத் தன்னுடைய குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு வந்தது, சையத் பாய் மனதில் ஆழ்ந்த வடுவை ஏற்படுத்தியது. ஏற்கெனவே வறிய நிலையில் பெற்றோர் இருந்ததால், தையல் வேலை செய்து தன்னையும் தன் குழந்தைகளையும் காப்பாற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார் கதீஜா. சமூகத்தில் ஆணாதிக்கம் காரணமாக ஏற்பட்டுவரும் இந்தப் பாதிப்புகளை நேரிலேயே பார்த்து மனம் வருந்தினார் சையத்.

“மணவிலக்கு பெறும் உரிமை எப்போதும் ஆண்களுக்கு மட்டுமே ஏன் இருக்கிறது” என்று தனக்குத் தானே கேட்டுக்கொண்டார். பிறகு, இதே கேள்விகளை மவுல்விகளிடமும் இமாம்களிடமும் கேட்டார். அவர்கள் அவரையும் அவருடைய கேள்வியையும் புறக்கணித்தனர். இதற்கிடையே புணே நகரில் செயல்பட்டுக்கொண்டிருந்த சோஷலிஸ்ட்டுகளுக்கு அவர் நண்பர் ஆனார். அவர்கள் மூலம் ஹமீத் தலவாயைப் பற்றித் தெரிந்துகொண்டு பிறகு அவருக்கு நெருங்கிய சகாவாக மாறினார்.

1970 மார்ச்சில் ஹமீத் தலவாயும் அவருடைய சகாக்களும் சேர்ந்து ‘முஸ்லிம் சத்யஷோடக் மண்டல்’ என்ற அமைப்பை ஏற்படுத்தினர். 19-வது நூற்றாண்டில் வாழ்ந்த சமூக சீர்திருத்தவாதி ஜோதிபா புலே இதே போல சாதி, பாலினப் பாகுபாடுகளைக் களைய ‘சத்யஷோடக் மண்டல்’ என்ற அமைப்பை உருவாக்கியிருந்தார். இஸ்லாமிய சமூகத்தவரிடம் மதம் சார்ந்த விருப்பு வெறுப்புகள் இல்லாத, தேசிய உணர்வு ஏற்படுவதற்காக இந்த அமைப்பை உருவாக்கியிருப்பதாக அதன் தொடக்க நிகழ்ச்சியில் அறிவித்தார் தலவாய்.

1977-ல் ஹமீத் தலவாய் நடுத்தர வயதிலேயே இயற்கை எய்தினார். மதவாதிகளின் ஆணாதிக்க உணர்வுகளுக்கு எதிரான போராட்டத்தை அவருடைய மனைவியர் மெஹ்ருன்னிசா, சையத் பாய் போன்ற தோழர்களின் ஆதரவோடு தீவிரப்படுத்தினார். பிற்போக்குவாதிகள் அவர்களை வாய்க்கு வந்தபடி ஏசியதுடன் அடித்தும் காயப்படுத்தினர்.

1980-களில் கணவரிடம் மணவிலக்கு பெற்ற ஷா பானு, ஜீவனாம்சம் கோரி நடத்திய போராட்டத்தில் சையத் பாய் தன்னையும் ஈடுபடுத்திக்கொண்டார். ஷா பானுவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று இந்தூர் சென்று அவரைச் சந்தித்தார். அவரை புணே நகருக்கு வரவழைத்துப் பாராட்டு விழா நடத்தி, நியாயத்துக்காகப் போராட ஊக்கப்படுத்தினார்.

தன்னுடைய குருநாதரின் மறைவும், ஷா பானு வழக்கில் ஏற்பட்ட பின்னடைவும் சையத் பாயின் சீர்திருத்த முயற்சிகளை பலவீனப்படுத்திவிடவில்லை. 1990-களிலும், இந்த நூற்றாண்டிலும் கூட அவர் தனது போராட்டத்தைத் தொடர்ந்தார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் புணேயில் அவரைச் சந்தித்தேன். தோல்விகள் பல ஏற்பட்டாலும் கசப்பை வெளிக்காட்டாமல் கண்ணியமாகவே பேசினார்.

இந்திய இஸ்லாத்தில் பாலினச் சமத்துவம் வேண்டும் என்பதற்காக மெஹ்ருன்னிசா தலவாயும் ஷா பானுவும் முக்கியப் பங்காற்றினார்கள். இப்போது ‘பாரதிய முஸ்லிம் மகிளா அந்தோலன்’ என்ற அமைப்பின் மூலம் முஸ்லிம் மகளிர் நேரடியாகக் களத்தில் இறங்கியுள்ளனர். அதேநேரத்தில், தொடக்க காலத்தில் முஸ்லிம் ஆணாதிக்கவாதிகளுக்கு எதிராகக் குரல் கொடுத்த துணிச்சல் மிக்க முஸ்லிம் ஆண்களை இந்த நேரத்தில் நாம் மறந்துவிடக் கூடாது. ஹமீத் தலவாய், சையத் மெஹ்பூப் ஷா காத்ரி என்று அனைவருமே மறக்கப்படக்கூடாது, மறக்கப்பட மாட்டார்கள்.

தமிழில்: சாரி

SCROLL FOR NEXT