நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை அருகே வன்னியர் சங்க பிரமுகர் கொல்லப்பட்டதற்கு உட்கட்சிப் பூசலே காரணம் எனத் தெரியவந்துள்ளது.
மயிலாடுதுறை அருகேயுள்ள மேலப்பெரும்பள்ளத்தைச் சேர்ந்த மூர்த்தி என்ற அகோரமூர்த்தி (48) நேற்று முன்தினம் மர்ம நபர்களால் செம்பனார்கோவில் ஒன்றிய அலுவலகம் அருகே வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டப்பட்டும் கொல்லப்பட்டார். இதையடுத்து மயிலாடுதுறை, செம்பனார்கோவில் பகுதிகளில் பதற்றம் நிலவியது. அரசுப் பேருந்துகள் உடைக்கப்பட்டன. மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகே பாமக-வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை அரசுப் பொது மருத்துவமனையில் பிரேதப் பரி சோதனை செய்யப்பட்ட நிலை யில் வன்னியர் சங்க மாநில தலை வர் குரு வந்ததும் உடலைப் பெற்றுக் கொள்கிறோம் என்று உறவினர்களும் வன்னியர் சங்க பிரமுகர்களும் கூறிவிட்டனர். இந்நிலையில் மூர்த்தியின் உடல் நேற்று பகல் 12 மணி வரை அங்கேயே பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தது. 12 மணி யளவில் குரு மருத்துவமனைக்கு வந்து அஞ்சலி செலுத்தியதும் மூர்த்தியின் உடல் செம்பனார் கோவிலுக்கு கொண்டுசெல்லப் பட்டு தகனம் செய்யப்பட்டது. மூர்த்தியின் உடலுக்கு பாமக தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
மாவட்ட காவல் கண்காணிப் பாளர் பிரவீன்குமார் தலைமை யில் துணைக் காவல் கண்காணிப் பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், இருநூறுக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து மயிலாடுதுறை, சீர்காழி, செம்பனார்கோவில் ஆகிய இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. நேற்றும் சில பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் மூர்த்தி கொல்லப்பட்டது குறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார், இது அரசியல் காழ்ப்புணர்ச்சி மற்றும் முன்விரோதம் காரணமாக நடந்த கொலை என்பதை உறுதி செய்துள்ளனர். பாமக மாநில துணைப் பொதுச் செயலாளரான இளையமதுக்கூடத்தைச் சேர்ந்த அகோரம்தான் மூர்த்தி மீதுள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக இக்கொலையை செய்திருக்க வேண்டும் என்று சந்தேகப்பட்டு அவரை தேடினர். போலீஸார் தன்னை தேடுவதை அறிந்த அகோரம் சென்னை ஆலந்தூர் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்துள்ளார்.
அரசியலில் மூர்த்தி மற்றும் அகோரத்துக்கு இடையே தொடர்ந்து கடுமையான மோதல் சூழல் இருந்து வந்துள்ளது. 20 நாட்களுக்கு முன் வைத்தீஸ்வரன்கோவில் அருகே இருவரது ஆதரவாளர்களும் தாக்கிக்கொண்டதில் அகோரத்தின் ஆட்கள் காயமடைந்து சீர்காழி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருவருக்கும் இடையேயான தொடர் மோதல்களின் விளைவுதான் மூர்த்தி கொலை என்று வழக்கை விசாரித்துவரும் காவல் துறையினர் கூறுகின்றனர்.
இந்நிலையில் இக்கொலைக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் அதன் ஓட்டுநரையும் செஞ்சி அருகே போலீஸார் பிடித்துள்ளதாகவும், கொலை செய்த கூலிப்படையினரை நெருங்கி விட்டதாகவும், அவர்களில் பலரை தங்கள் பிடிக்குள் கொண்டுவந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.