தமிழகம்

பரபரப்பான அரசியல் சூழலில் டெல்லி சென்றார் முதல்வர்: பிரதமருடன் இன்று சந்திப்பு - குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரவா?

செய்திப்பிரிவு

தமிழக முதல்வர் கே.பழனிசாமி நேற்று மாலை டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவர் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்துப் பேசுகிறார். அதிமுக அணிகள் இடையே குழப்பம் நீடிப்பது, குடியரசுத் தலைவர் தேர்தல் நெருங்குவது உள்ளிட்ட பரபரப்பான அரசியல் சூழலில் நடக்கும் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, வி.மைத்ரேயன் எம்.பி., முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன் ஆகியோர் கடந்த 19-ம் தேதி டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினர். ‘தமிழகத்தில் வருமானவரி சோதனையில் கிடைத்த ஆவணங்களின் அடிப் படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சசிகலா, டிடிவி தினகரன் கட்டுப்பாட்டில் இருக்கும் முதல்வர் பழனிசாமி தரப்பை நம்ப வேண்டாம்’ என்று மோடியிடம் அவர்கள் தெரிவித்ததாக கூறப் படுகிறது.

குடியரசுத் தலைவர் தேர்தலில் தங்கள் ஆதரவு எம்.பி., எம்எல் ஏக்கள் பாஜக வேட்பாளரை ஆதரிப்பார்கள் என அப்போது ஓபிஎஸ் உறுதி அளித்ததாகத் தெரிகிறது. ஆனால், வறட்சி, நீட் தேர்வு, காவிரி பிரச்சினை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தவே பிரதமரை சந்தித்ததாக ஓபிஎஸ் தெரிவித்தார்.

இந்நிலையில், முதல்வர் கே.பழனிசாமி நேற்று மாலை 5 மணிக்கு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்கும் அவர், இன்று பிரதமர் மோடியை சந்தித்துப் பேச இருப்பதாக தமிழக அரசு உயரதிகாரி ஒருவர் ‘தி இந்து’விடம் தெரிவித்தார்.

வறட்சி, குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க நிவாரணம் வழங்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவர் பிரதமரிடம் அளிக்க இருக்கிறார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிமுக (அம்மா) அணி எம்.பி., எம்எல்ஏக்கள் பாஜக வேட் பாளர்களை ஆதரிப்பார்கள் என மோடியிடம் முதல்வர் உறுதி அளிப்பார். அதிமுக அரசு தொடர்ந்து செயல்பட மத்திய அரசு ஒத்துழைக்குமாறும் கேட்டுக்கொள்வார் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சுகாதார அமைச்சர் விஜய பாஸ்கர் வீட்டில் நடந்த வருமான வரி சோதனை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து, தினகரன் கைது, அதிமுக அணிகள் இணைவதில் நீடிக்கும் சிக்கல் ஆகியவை குறித்தும் மோடியிடம் முதல்வர் பழனிசாமி பேச இருப்பதாகக் கூறப்படுகிறது.

குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவர உள்ளது. இத்தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு என முதல்வர் அறிவித்தால் பாஜகவின் வெற்றி உறுதியாகிவிடும். எனவே, பரபரப்பான அரசியல் சூழலுக்கு நடுவே நடக்கும் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது

SCROLL FOR NEXT