மேட்டூர் எம்.எல்.ஏ. செம்மலை கூறியது அவரது தனிப்பட்ட கருத்தா அல்லது ஓபிஎஸ் அணியின் கருத்தா என்பது குறித்து அந்த அணியினர் தெளிவுபடுத்த வேண்டும் என அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், "ஓபிஎஸ் அணி தனித்து செயல்படவே தொண்டர்கள் விரும்புகின்றனர் என செம்மலை கூறியிருக்கிறார். இது அவருடைய தனிப்பட்ட கருத்தா அல்லது ஓபிஎஸ் அணியின் கருத்தா என்பதை ஓபிஎஸ் தரப்பு தெளிவுபடுத்த வேண்டும்.
எங்களைப் பொருத்தவரையில் அதிமுக இரு அணிகளும் ஒன்றிணைவதற்கான காலம் கனிந்துவிட்டது. பலமுறை நானும், எனது குழுவைச் சார்ந்தவர்களும் அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்துவிட்டோம். ஆனால், அவர்கள்தான் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. இதை நீங்கள் (செய்தியாளர்கள்) அந்த அணியினரிடம் கேளுங்கள்" என்றார்.
முன்னதாக நேற்று (வெள்ளிக்கிழமை) தமிழகம் முழுவதும் கட்சி தொண்டர்கள் மற்றும் மக்களிடையே ஓபிஎஸ் அணிக்கு அமோக ஆதரவு உள்ளது. எடப்பாடி பழனிசாமி அணியுடன் இணைவதற்கு பெருவாரியான தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்களின் கருத்துக்கு முக்கியத்துவம் அளித்து, ஓபிஎஸ் தலைமையிலான முக்கிய நிர்வாகி கள் ஆலோசனை செய்து இது சம்பந்தமான முடிவு எடுக்கப்படும் எனக் கூறியிருந்தார்.