கோவாவில் நடைபெற்ற இடைத் தேர்தலில், முதல்வர் மனோகர் பாரிக்கர் பனாஜி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
அவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கிரிஷ் சோடாங்கரை விட அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இந்த தேர்தலில் பாரிக்கர் 9 ஆயிரத்து 862 வாக்குகள் பெற்றார். கிரிஷ் 5 ஆயிரத்து 59 வாக்குகளும், கோவா சுரக்ஷா கட்சியின் ஆனந்த ஷிர்தோகர் 220 வாக்குகளும் பெற்றனர்.
இதையடுத்து 4 ஆயிரத்து 803 வாக்குகள் வித்தியாசத்தில் பாரிக்கர் வெற்றி பெற்றார். அதேபோல வால்பாய் தொகுதியில் போட்டியிட்ட பாஜகவைச் சேர்ந்த விஸ்வஜித் ரானேவும் வெற்றி பெற்றுள்ளார்.
ஏன் இந்த இடைத் தேர்தல்?
கோவாவில் நடைபெற்ற தேர்தலில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் காங்கிரஸ் 17, பாஜக 13 இடங்களைக் கைப்பற்றின. பெரும்பான்மையை நிரூபிக்க 21 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் இரு கட்சிகளும் ஆட்சியமைக்க தீவிர முயற்சி மேற்கொண்டன.
மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி, கோவா பார்வர்டு கட்சி ஆகியவை தலா 3 தொகுதிகளைக் கைப்பற்றின. இவை தவிர 3 சுயேச்சைகளும் வெற்றி பெற்றனர்.
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் முதல்வராகப் பதவியேற்றால் ஆதரவு அளிக்கத் தயார் என்று மகாராஷ்டிரவாதி கோமந்தக், கோவா பார்வர்டு மற்றும் சுயேச்சை எம்எல்ஏக்கள் தெரிவித்தனர். தேசியவாத காங்கிரஸை சேர்ந்த எம்எல்ஏ சர்ச்சிலும் பாஜகவுக்கு ஆதரவு அளித்தார்.
இதனையடுத்து சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவுடன் கோவாவில் பாஜக ஆட்சி அமைத்தது. இந்நிலையில் கோவா மாநில முதல்வராக மார்ச்
14-ம் தேதி மனோகர் பாரிக்கர் பதவியேற்றார். இதனை முன்னிட்டு தனது மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்திருந்தார்.
இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 23-ம் தேதி கோவாவின் இரண்டு தொகுதிகளில் இடைத் தேர்தல் நடைபெற்றது.
தேர்தல் முடிவுகள் இன்று வெளியான நிலையில், கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் பனாஜி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். சுகாதாரத்துறை அமைச்சராகப் பதவியேற்ற பாஜகவின் விஸ்வஜித் ரானே வால்பாய் தொகுதியில் வெற்றி பெற்றார். இவர் காங்கிரஸ் வேட்பாளரை 7 ஆயிரத்து 591 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார்.