தமிழகம்

டெங்கு, காய்ச்சல் நோயாளிகளுக்கு சிகிச்சை: கோவை அரசு மருத்துவமனைக்கு தினமும் 80 யூனிட் ரத்தம் தேவை

ர.கிருபாகரன்

கோவை அரசு மருத்துவமனை ரத்த வங்கியிலிருந்து மருத்துவமனை சிகிச்சைக்கு வழங்கப்படும் மொத்த ரத்த அளவில் சுமார் 60 சதவீத ரத்தம் டெங்கு, மர்மக் காய்ச்சல் நோயாளிகளுக்கே போதுமானதாக இருப்பதால் கூடுதல் ரத்த தானத்தை எதிர்பார்த்து காத்துள்ளனர் மருத்துவமனை நிர்வாகத்தினர்.

கோவை அரசு மருத்துவமனைக்கு தினசரி சுமார் 7 ஆயிரம் வெளி நோயாளிகளும், சுமார் 1300 பேர் உள் நோயாளிகளாகவும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுகின்றனர். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கோவையில் டெங்கு, மர்மக் காய்ச்சல் தீவிரமடைந்துள்ளது. நோய்த் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலும், கோவை அரசு மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இதனால், 200 படுக்கை வசதிகள்கொண்ட தனி வார்டு ஒதுக்கப்பட்டு 24 மணி நேர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே டெங்கு, காய்ச்சல் நோயாளிகளுக்கான ரத்தத்தின் தேவையும் அதிகரித்துள்ளது.

கோவை அரசு மருத்துவமனை ரத்த வங்கியில் தானமாகப் பெறப்படும் ரத்தம், விபத்து அவசர சிகிச்சை, மகப்பேறு சிகிச்சை, அறுவைசிகிச்சை போன்ற முக்கியமான சிகிச்சைகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த ரத்த வங்கியில் அதிகபட்சமாக 2500 யூனிட் ரத்தம் சேமித்து வைக்க முடியும். மாதம்தோறும் சராசரியாக 1000லிருந்து 1250 யூனிட் வரை ரத்தத்தை தானமாகப் பெற்று சிவப்பணுக்கள், பிளாஸ்மா, தட்டணுக்கள் என தனித்தனியாக பிரித்து, தேவைக்கு ஏற்ப வழங்குவதால் தேவைகள் சமாளிக்கப்படுகின்றன. இருந்தாலும் கூட ஏப்ரல், மே மாதங்களில் கல்லூரி விடுமுறை காரணமான ரத்த தானம் குறைந்துவிடுகிறது.

ஜூன், ஜூலை மாதங்களில் ரத்ததானம் சகஜநிலை திரும்பிவிடும் என்றாலும், இந்த ஆண்டு 200-க்கும் அதிகமான டெங்கு, மர்மக் காய்ச்சல் நோயாளிகள் தொடர்ந்து சிகிச்சையில் இருப்பதால் மொத்த இருப்பில் பெரும்பகுதி ரத்தம் அவர்களது சிகிச்சைக்கே தேவையாக இருக்கிறது. சராசரியான ரத்த தானமும், அதிகமான தேவையும் நிலவுவதால் விபத்து, மகப்பேறு போன்ற அவசரத் தேவைகளுக்கு ரத்தம் பற்றாக்குறை ஆகிவிடுமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. எனவே ரத்தக் கொடையாளர்களின் உதவியை மருத்துவமனை நிர்வாகம் எதிர்பார்த்துள்ளது.

காய்ச்சல் சிகிச்சைக்கு 60%

அரசு மருத்துவமனை ரத்த வங்கி அலுவலர் மங்கையர்கரசி கூறும்போது, ‘மாதந்தோறும் சராசரியாக 1250 யூனிட் வரை ரத்தம் தானமாக கிடைக்கிறது. இதனால் பற்றாக்குறை ஏதும் ஏற்படுவதில்லை. ஆனால், சமீபத்தில் டெங்கு, காய்ச்சல் நோயால் பாதிக்கப்படுவோருக்கு ரத்தத்தின் தேவை அதிகரித்துள்ளது.

வழக்கமாக ரத்த வங்கியிலிருந்து தினமும் அனைத்துவித சிகிச்சைகளுக்கும் சேர்த்து சராசரியாக 135 யூனிட் வரை ரத்தம் வழங்கப்படுகிறது. தற்போது அதில் 60 சதவீத ரத்தம் காய்ச்சல் சிகிச்சைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. நேற்றுமுன்தினம் ஒருநாளில் மட்டும் 85 யூனிட் ரத்தம் காய்ச்சல் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டது. இதனிடையே மகப்பேறு, விபத்து போன்ற சிகிச்சைகளுக்கும் ரத்தத்தின் தேவை உள்ளது.

மாதந்தோறும் அதிகபட்சமாக 8 ரத்ததான முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதனை அதிகப்படுத்தினால் மட்டுமே இந்த நிலைமையை சமாளிக்க முடியும். எனவே ரத்தக் கொடையாளர்களின் உதவியை நாடியுள்ளோம்’ என்றார்.

இதுகுறித்து அரசு மருத்துவமனை முதல்வர் அசோகன் கூறும்போது, ‘நேற்றைய நிலவரப்படி 173 பேர் காய்ச்சலுக்கும், 26 பேர் டெங்கு அறிகுறிகளுடனும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். அவர்களது மருத்துவ சிகிச்சைக்கு பெருமளவில் ரத்தத்தின் தேவை உள்ளது. எனவே ரத்த தானத்தை பெற நடவடிக்கை எடுத்து வருகிறோம்’ என்றார்.

SCROLL FOR NEXT