மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் பணியிடங்களை அக்டோபர் 30-ம் தேதிக்குள் நிரப்ப தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த திருமுருகன் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:
தமிழக மாநில மனித உரிமை ஆணையம் கடந்த 7 மாதங்களாக உறுப்பினர்கள் இல்லாமல் இயங்கி வருகிறது. இதனால் பொதுமக்கள், மாணவர்கள், பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் உள்ளிடோருக்கு எதிராக நிகழ்த்தப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. எனவே, ஆணையத்தில் தலைவர் தவிர காலியாக உள்ள உறுப்பினர் பதவிகளை நிரப்ப உத்தரவிட கோரப்பட்டிருந்தது.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, ஆணைய உறுப்பினர்களை முதல்வர், சட்டப்பேரவைத் தலைவர், சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் ஆகியோர் கொண்ட குழுவே உறுப்பினர்களைத் தேர்வு செய்ய இயலும் எனவும் அது குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே. சசிதரன், ஜி.ஆர். சுவாமிநாதன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆணையத்தின் உறுப்பினர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், விரைவில் நிரப்பப்படும் எனவும் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். இதையேற்று அக்.30-க்குள் ஆணைய உறுப்பினர் பணியிடங்களை நிரப்ப அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.