மீனவர் பிரச்சினை மோசமைடைய பாஜகவின் மெத்தனப்போக்கு தான் காரணம் என வாசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழக மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை உயர்நிதிமன்றம் விதித்துள்ள தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி தங்கச்சிமடத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்களை ஜி.கே. வாசன் சனிக்கிழமை மதியம் சந்தித்தார். அப்போது மாவட்டத் தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி, முன்னாள் எம்.எல்.ஏக்கள் ஹசன் அலி, ராம்பிரபு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உடையப்பன், மீனவப் பிரநிதிகள் போஸ் மற்றும் தேவதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய வாசன் பாதிக்கப்பட்ட மீனவ குழந்தைகளின் கல்விஉதவிக்காக ரூ. 1 லட்சம் நிவாரணம் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் ஜி.கே. வாசன் கூறியதாவது,
காங்கிரஸ் ஆட்சியை விட பல மடங்கு மோசமான நிலையில் மீனவர் பிரச்சினை மாறி இருக்கிறது என்றால் மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியின் மெத்தனம் தான் காரணம் என்று பகிரங்கமாக குற்றஞ்சாட்டுகிறேன். மீனவர்களின் எண்ணங்களை பிரதிபலிக்கத் தவறிய ஆட்சியாளர்களை நிச்சயமாக தமிழக மக்கள் மன்னிக்க மாட்டர்கள்.
தூக்கிக் கொண்டிருப்பவர்களை எழுப்பலாம். ஆனால் தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது. எனவே மத்திய அரசு இனிமேலாவது விழித்துக் கொள்ள வேண்டும் மத்திய அரசு வெளியுறவுத்துறையின் மூலம் உயர் அதிகாரிகளை இலங்கைக்கு அனுப்பி அப்பாவி மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும்.
மீனவர்கள் பிரச்சினைக்கு அரசியல் சாயம் பூசக்கூடாது. அரசியல் மாச்சர்யங்களுக்கு அப்பாற்பட்டு மனிதநேயத்தோடு மீனவர்களுக்கு துயர் நீக்கின்ற தலைவர்களும் தொண்டர்களும் ஒன்றுகூடி மத்திய, மாநில அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண அனைத்து தமிழக கட்சிகளும் ஒன்றிணைந்து போராடினால் தான் முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
கச்சத்தீவு ஒப்பந்தத்தை இலங்கை அரசு மீறி இருக்கிறது. கச்சத்தீவில் வழிபாட்டு உரிமை, வலைகளை காயப் போடும் உரிமை, மீனவர்கள் ஓய்வெடுக்கும் உரிமை ஆகியவை மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிலை மாற வேண்டும் என்றால் கச்சத்தீவை மீட்டு மீனவர்களிடமே திரும்ப ஒப்படைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், என்றார் வாசன்.
முன்னதாக தங்கச்சிமடத்தில் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் சார்பாக தங்கச்சிமடத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் தலைவர் என். ஆர். தனபாலன் தலைமை வகித்து இலங்கை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ள 5 மீனவர்கள் உடனே விடுவிக்க வேண்டும், இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ள 82 படகுகளை விடுவிக்க வேண்டும், யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் 24 மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும், என்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான மீனவர்களும், கட்சி தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
ஜி.கே.வாசன் உடன் முன்னாள் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும், ராஜபக்சேவின் நண்பருமான ஹசன் அலி வந்ததால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்ப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளாக மத்திய அமைச்சராக இருந்த போது மீனவர்களை சந்திக்காத வாசன் இப்போது சந்திக்க வந்தால் மீனவப் பெண்கள் கண்டன கோஷங்களும் எழுப்பினர்.