திருநெல்வேலியில் காற் றாலை மேலாளரைத் தாக்கி பறிக்கப்பட்ட 3 கோடி மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள மேலும் 5 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியைச் சேர்ந் தவர் பால்ராஜ்(38). தனியார் காற்றாலை மேலாளரான இவர், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். இவர், தன்னிடம் இருந்த ரூ.3 கோடி மதிப்பிலான செல்லாத பழைய ரூபாய் நோட்டுகளை கமிஷன் அடிப்படையில் மாற்றித் தருமாறு திருநெல்வலி மாவட்டம் நாங்கு நேரியைச் சேர்ந்த சுந்தர்(39), மேலப்பாளையம் அழகிரிபுரத்தைச் சேர்ந்த ஜெயபால்(48) ஆகியோரை அணுகியுள்ளார்.
கும்பல் வழிமறிப்பு
அவர்கள் கூறியபடி, கடந்த 14-ம் தேதி இரவில் பணத்தை எடுத்துக்கொண்டு தச்சநல்லூருக்கு தனது நண்பர்களுடன் காரில் வந்த பால்ராஜை, சிதம்பரநகர் அருகே ஒரு கும்பல் வழிமறித்து தாக்கி விட்டு, பணத்தை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றது.
இதனால் ஜெயபால் மீது சந்தேகமடைந்த பால்ராஜ் உள்ளிட்டோர் அவரது வீட்டுக்குச் சென்று, அவரது மகனான பொறியியல் மாணவர் சுரேஷை கடத்திச்சென்று தாக்கினர். அவர்களது பிடியில் இருந்து சுரேஷ் தப்பினார்.
பணம் பறிக்கப்பட்டது குறித்து திருநெல்வேலி மாநகர குற்றப் பிரிவு போலீஸில் கடந்த 15-ம் தேதி பால்ராஜும், கடத் தித் தாக்கியது குறித்து மேலப்பாளையம் போலீஸில் சுரேஷும் புகார் அளித்தனர்.
பணம் பறிமுதல்
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்திய போலீஸார், ஜெயபால் உட்பட 6 பேரைக் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 3 கோடி பழைய ரூபாய் நோட்டுகளை நேற்று பறிமுதல் செய்தனர். மேலும், கடத்தல் புகாரில் பால்ராஜ் உட்பட 6 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து நெல்லை மாநகர குற்றப்பிரிவு துணை ஆணையர் சுகுணாசிங் கூறும்போது, “பிடிபட்டவர்களிடம் இருந்து 2 கார்கள், 6 இருசக்கர வாகனங்கள், செல்போன்கள் மற்றும் ரூ.3 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தலைமறைவாக உள்ள மேலும் 5 பேரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்” என்றார்