பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியின் பதிலுரையை புறக்கணித்து ஆளும் அதிமுக உறுப்பினர் எதிர்கோட்டை எஸ்.ஜி.சுப்பிர மணியன் (சாத்தூர்) வெளிநடப்பு செய்தது பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
சட்டப்பேரவையில் நேற்று கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் பால் வளம் ஆகிய 3 துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. பால்வளத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அத்துறையின் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பதிலளித்தார்.
அவர் தனது பதிலுரையை தொடங்கியதும் ஆளும் கட்சி யான அதிமுக உறுப்பினர் சுப்பிரமணியன் பேரவையை விட்டு வெளியேறினார்.
விருதுநகர் மாவட்ட அதிமுக வில் நிலவும் கோஷ்டி மோதல் காரணமாக அந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பதிலுரையை புறக் கணித்து அதே மாவட்டத்தைச் சேர்ந்த எம்எல்ஏ வெளிநடப்பு செய்தார்.
சில வாரங்களுக்கு முன்பு விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வனும், அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் வெளிப்படையாக விமர்சனம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
தொடரும் வெளிநடப்பு
கடந்த மாதம் ஜூன் 23-ம் தேதி நடைபெற்ற தொழில் துறை மானியக் கோரிக்கையின்போது அத்துறையின் அமைச்சர் எம்.சி.சம்பத் பேசினார். அப்போது கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர்கள் பி.சத்யா (பண்ருட்டி), கே.ஏ.பாண்டியன் (சிதம்பரம்), வி.டி.கலைச்செல்வன் (விருத்தாச்சலம்), என்.முருகு மாறன் (காட்டுமன்னார்கோவில்) ஆகியோர் அமைச்சரின் பதிலு ரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
அதுபோல நடப்பு சட்டப் பேரவை கூட்டத் தொடரில் துணை கேள்வி கேட்க அனுமதிக்கவில்லை எனக்கூறி அதிமுக உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன் (ஆண்டிப் பட்டி) வெளிநடப்பு செய்தார். அதுபோல துணை கேள்வி கேட்க அனுமதி கிடைக்காததால் வெளிநடப்பு செய்ய முயன்ற அதிமுக உறுப்பினர் ஏ.ராமுவுக்கு (குன்னூர்) கடந்த வாரம் பேரவைத் தலைவர் பி.தனபால் கடும் கண்டனம் தெரிவித்தார்.
அமைச்சர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளும் கட்சி எம்எல்ஏக் களே வெளிநடப்பு செய்வது பெரும் பரபரப்பையும், முதல்வர் கே.பழனிசாமி தலைமையிலான அரசுக்கு தர்மசங்கடத்தையும் ஏற்படுத்தியுள்ளது.