தமிழகம்

புதிய மீன்பிடி சட்டத்தை திரும்ப பெற மாட்டோம்: இலங்கை அமைச்சர் திட்டவட்டம்

செய்திப்பிரிவு

இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற் றப்பட்டுள்ள புதிய மீன்பிடி சட்டத்தை திரும்ப பெற மாட்டோம் என அந்நாட்டு மீன்வளத் துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசு மீன்வளம் மற்றும் நீர்வளத் திருத்த மசோதாவை, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை தாக்கல் செய்துள்ளது. அதில் இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்தால் 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ. 50 ஆயிரம் (இலங்கை பணத்தில்) அபராதமும் விதிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சட்டத் திருத்தம் குறிப்பாக, பாக். ஜலசந்தி பகுதியில் பாரம்பரியமாக, பல நூற்றாண்டுகளாக மீன் பிடித்துவரும் தமிழக மீனவர்களின் உரிமையை பறிக்கும் என்பதால், இந்தியாவின் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். மேலும் தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

மீனவர்கள் வேலைநிறுத்தம்

மேலும் எல்லை தாண்டி மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கு அபராதத்துடன் சிறை தண்டனை விதிக்கும் வகையில், இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற் றப்பட்டுள்ள புதிய சட்டத்தை திரும்ப பெறக்கோரி, ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்ததில் ஈடுபட் டுள்ளனர். இந்நிலையில், இலங்கையி லுள்ள அம்பாந்தோட்டையில் அந்நாட்டு மீன்வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள புதிய மீன்பிடி சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் அல்லது மாற்றம் செய்ய வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்த புதிய மீன்பிடி சட்டம் இந்திய மீனவர்களுக்கு மட்டும் அல்ல, அனைத்து மீனவர்களுக்கும் ஆனது. தமிழகத்தில் இதுகுறித்து மீனவர்கள் நடத்தும் போராட்டங்கள் மூலம் இலங்கை அரசைக் கட்டுப்படுத்த முடியாது என்றார்.

SCROLL FOR NEXT