தமிழகம்

‘குட்கா’ விவகாரம் குறித்து பேச அனுமதி மறுப்பு: சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு

செய்திப்பிரிவு

தடை செய்யப்பட்ட குட்கா போன்ற போதைப் பொருட்களை விற்க காவல் துறை உயர் அதிகாரிகள் லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர் பாக பேச அனுமதி மறுக்கப் பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் நேற்று வெளிநடப்பு செய்தனர்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க் கட்சி துணைத் தலைவர் துரை முருகன் எழுந்து, குட்கா விவகாரம் குறித்து பேச முயன்றார்.

அதற்கு அனுமதி மறுத்த பேரவைத் தலைவர் பி.தனபால், ‘‘எதிர்க்கட்சி துணைத் தலைவர் குறிப்பிடும் பொருள் குறித்து ஏற்கெனவே விவாதிக்கப்பட்டு முதல்வர் பதிலளித்து விட்டார். எனவே, திரும்பத் திரும்ப அதையே பேசி பேரவையின் நேரத்தை வீணடிக்க வேண்டாம்’’ என்றார்.

ஆனாலும், துரைமுருகன் மீண்டும் அதே பிரச்சினையை எழுப்ப முயன்றார். அவருக்கு ஆதரவாக திமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கோஷமிட்டனர். அவர்களை அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொண்ட பேரவைத் தலைவர், ‘‘எதிர்க்கட்சி துணைத் தலைவர் என்ன பேச வருகிறார் என்பதை என்னால் ஓரளவுக்கு புரிந்துகொள்ள முடிகிறது. ஏற்கெனவே விவாதிக்கப்பட்ட விவகாரத்தை மீண்டும் இங்கே அனுமதிக்க முடியாது’’ என்றார்.

பேரவைத் தலைவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து துரைமுருகன் தலைமையில் திமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

பதவி நீட்டிப்பு ஏன்?

பின்னர் சட்டப்பேரவை வளா கத்தில் நிருபர்களிடம் பேசிய துரைமுருகன், ‘‘தடை செய்யப்பட்ட குட்கா போன்ற போதைப் பொருட்களை விற்க அமைச்சர் ஒருவரும், காவல் துறை உயர் அதிகாரிகளும் லஞ்சம் பெற்றதாக வருமானவரித் துறை சோதனையில் கிடைத்த ஆவணங்களின் மூலம் தெரியவந்துள்ளது. அதில் சம்பந் தப்பட்ட காவல் துறை அதிகாரிக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேரவையில் கேள்வி எழுப்ப முயன்றோம்.

ஆனால், பேரவைத் தலைவர் அனுமதிக்க வில்லை. அப்போது அவையில் இருந்த முதல்வரும் இதுகுறித்து விளக்கம் அளிக்க முன்வரவில்லை. இதிலிருந்து இந்த விவகாரத்தில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது’’ என்றார்.

வெளிநடப்பு செய்த திமுக உறுப்பினர்கள் அனைவரும் சிறிது நேரத்தில் அவைக்கு திரும்பி வீட்டுவசதி, தகவல் தொழில்நுட்பத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பங்கேற்றனர். குட்கா விவகாரத்துக்காக நடப்பு சட்டப்பேரவை கூட்டத் தொடரில் 3-வது முறையாக திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்வது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT