தமிழகம்

இன்று குடியரசுத் தலைவர் தேர்தல்: தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு

செய்திப்பிரிவு

பொன்.ராதாகிருஷ்ணன், கேரள எம்எல்ஏக்கு சென்னையில் வாக்களிக்க அனுமதி

குடியரசுத் தலைவர் தேர்தலை முன்னிட்டு தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழக பாஜக எம்.பியும் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் கேரள எம்எல்ஏ ஒருவரும் சட்டப்பேரவை வளாகத்தில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் குடியரசுத் தலைவராக உள்ள பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவதைத் தொடர்ந்து, புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்ய இன்று தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில், பாஜக கூட்டணி சார்பில் ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் கூட்டணி சார்பில் மக்களவை முன்னாள் தலைவர் மீராகுமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்தத் தேர்தலில் மக்களவை, மாநிலங்களவை எம்பிக்கள், நாடு முழுவதும் உள்ள எம்எல்ஏக்கள் வாக்களித்து குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பார்கள். எம்எல்ஏக்கள் வாக்களிக்க வசதியாக, அந்தந்த மாநில சட்டப்பேரவை வளாகத்தில் தேர்தல் நடத்தப்படுகிறது. தமி ழகத்தைப் பொறுத்தவரை, சட்டப் பேரவைச் செயலர் க.பூபதி மற்றும் இணைச் செயலர் சுப்பிரமணி ஆகி யோர் உதவித் தேர்தல் அலுவலர்களாக நியமிக்கப்பட் டுள்ளனர்.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி பார்வையாளராக செயல்பட்டு வருகிறார். சட்டப்பேரவை வளாகத் தில் பேரவைச் செயலர் அறை அருகில் உள்ள பேரவைக் கூட்ட அரங்கில், வாக்குப் பதிவுக்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வாக்குப் பதிவுக்கான வாக்குப் பெட்டி டெல்லியில் இருந்து வரவழைக்கப்பட்டு, பேரவைக் செயலர் அறையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

இது தவிர, பேரவை வளாகத்தில் பாதுகாப்புக்காக போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். பேரவை 4-ம் எண் நுழைவு வாயிலிலிருந்து வாக்குப் பதிவு அறைக்கு எவ்வாறு செல்ல வேண்டும் என்பதற்கான வழிகாட்டி பலகைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. வாக்குப் பதிவின்போது, வேட்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் தனித் தனி முகவர்கள் இருக்க அனுமதிக்கப் படுவார்கள்.

வாக்காளர் பட்டியல்

தகுதியான உறுப்பினர்கள் வாக்களிக்க வசதியாக, வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளது. வாக்காளர்கள் தங்கள் தகுதி ஆவணத்தைக் காட்டி வாக்களிக்கலாம். எம்எல்ஏக்களுக்கு இளஞ்சிவப்பு நிற வாக்குச் சீட்டும், எம்பிக் களுக்கு பச்சை நிற வாக்குச் சீட் டும் வழங்கப்படுகிறது. எம்எல்ஏக் களுக்கான வாக்குச் சீட்டை தமிழக தேர்தல் துறை தயாரித்துள்ளது.

இந்த வாக்குச் சீட்டில், வேட் பாளர் பெயர் குறிப்பிடப்பட்டிருக் கும். அந்த வேட்பாளரின் பெய ருக்கு எதிரில் உள்ள இடத்தில் 1 என குறிப்பிட்டு வாக்களிக்க வேண்டும். மேலும், தேர்தல் ஆணையம் அளிக்கும் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வந்து வாக்களிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிறப்பு அனுமதி

எம்பிக்கள் இந்த தேர்தலில் டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் வாக்களிக்கலாம். எம்எல்ஏக்கள் அந்தந்த மாநில சட்டப்பேரவை வளாகத்தில் வாக் களிக்கலாம். ஒருவேளை, வேறு இடத்தில் வாக்களிக்க எம்பிக்களோ, எம்எல்ஏக்களோ விரும்பினால், கடந்த 6-ம் தேதிக்கு முன் சம்பந்தப்பட்ட சட்டப்பேரவையில் எழுத்துப்பூர்வமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் தேர்தல் அலுவலர் மூலம் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட்டு அனுமதி பெறப்படும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக, திமுக எம்பிக்கள் நாடாளு மன்றத்தில் வாக்களிக்கின்றனர். ஆனால், தமிழக பாஜக எம்பியும், மத்திய தரைவழி போக்குவரத்துத் துறை இணை அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன், கேரளா வைச் சேர்ந்த எம்எல்ஏ பறக்கல் அப்துல்லா ஆகியோர் தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் வாக் களிக்கின்றனர். அவர்களுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வாக்களிக்க அதிமுகவில் பயிற்சி

அதிமுக அம்மா கட்சியைச் சேர்ந்த 123 எம்எல்ஏக்கள், அதிமுக புரட்சித்தலைவி அம்மா கட்சியைச் சேர்ந்த 11 எம்எல்ஏக்கள் தமிழக சட்டப்பேரவையில் வாக்களிக்கின்றனர். இவர்களில் அம்மா கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் கடந்த 2 தினங்களாக சென்னையிலேயே தங்கியுள்ளனர். இவர்களுக்கு 3 மாவட்ட எம்எல்ஏக்களுக்கு ஒரு அமைச்சர் வீதம் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், எம்எல்ஏக்களுக்கு எவ்வாறு வாக்களிப்பது என பயிற்சி அளித்தனர்.

SCROLL FOR NEXT