சேலம் மாநகரின் ஒட்டு மொத்த கழிவு நீருடன், ரசாயன சாயக்கழிவுகளையும் சுமந்து செல்லும் திருமணிமுத்தாறால், விளைநிலங்கள் பாழ்பட்டு, விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
சேலம் சேர்வராயன் மலைத் தொடரில் இருந்து மழைக்காலங்களில் உருண்டோடி வரும் மழை நீர், புது ஏரி, மூக்கனேரிகளை வந்தடைந்து, அணைமேட்டில் இருந்து திருமணிமுத்தாறாய் ஓடி வருகிறது. சேலம் மாநகர மக்கள் வெளியேற்றும் கழிவு நீரை சுமந்து செல்லும் ஆறாய் மாறியது. கொசு உற்பத்தி முதல் சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் கேந்திரமாய் விளங்கும் திருமணிமுத்தாறு கான்கிரீட் தளத்துடன் சாக்கடை கால்வாயாக மாறிவிட்டது. நகர எல்லையைத் தாண்டி உத்தமசோழபுரம், வீரபாண்டி வழியாக நாமக்கல் மாவட்டத்தைக் கடந்து, கரூர் அருகே காவிரி ஆற்றில் கலந்து வருகிறது.
ஒரு காலத்தில் ஆற்று நீர் பாசனத்துக்கு உதவிய திருமணிமுத் தாறு நாளடைவில் நகரமயமான தால், சாக்கடை நீர் செல்லும் வழிப் பாதையாக மாறிவிட்டது. இருப்பினும், திருமணிமுத்தாறு செல்லும் வழியோர பாசன விளைநிலங்களுக்கு நிலத்தடி நீர் குறைவின்றி கிடைத்து வருவதால், விவசாயத் தொழில் செம்மையாக நடந்து வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், கடந்த பல ஆண்டுகளாக திருமணிமுத்தாறு கரையோர விளை நிலங்களின் மண் மாசு ஏற்பட்டு, விளைச்சல் குறைந்து விட்டதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
திருமணிமுத்தாற்றில் ஓடும் கழிவு நீரும், சாயப்பட்டறை ரசாயன கழிவுகளும் மண் வளத்தை பெரும் பகுதி கெடுத்து விட்டன. இதனால், திருமணிமுத்தாறு பாசனக் கரையோர பகுதிகளில் விளைச்சல் குறைவால், பலரும் தங்களது நிலத்தை ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு விற்றுச் சென்ற வேதனையும் நடந்துள்ளதாக விவசாயிகள் வருத்தத்துடன் கூறுகின்றனர்.
எனவே, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சுற்றுப்புற சுகா தாரத்துக்கும், விளை நிலங்களுக் கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலான ரசாயனக் கழிவுகளை ஆற்றில் கலந்து விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம் உத்தமசோழபுரம் பகுதியில் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, திருமணிமுத்தாற்றில் வரும் கழிவு நீரை சுத்திகரித்து விடுவதன் மூலம் விவசாயிகள் பாசனத்துக்கு பயன்படுத்தவும், மண் மாசுபாடு ஏற்படாமல் தடுக்கவும் முடியும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.