தொழிலாளர், விவசாய, ஏழை எளிய, நடுத்தர மக்களை பாதிக்கும் ஜிஎஸ்டி வரியை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளர் ஜெ.தீபா வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக திங்கட்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''நாடு முழுவதும் சனிக்கிழமை முதல் அறிமுகமாகியுள்ள ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையில் 80% பொருள்களின் விலை உயர்ந்து உள்ளது. 35 சதவீதம் முதல் 40 சதவீதம் வரையிலான பொருளாதாரம் ஜிஎஸ்டிக்குள் வரவில்லை. குறிப்பாக பெட்ரோலியம், மின்சாரம், ரியல் எஸ்டேட் போன்றவை ஜிஎஸ்டி வரிவிதிப்பில் வரவில்லை. ஜிஎஸ்டி வரிவிதிப்பு காரணமாக சிறுகுறு வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பாடுவார்கள்.
நாட்டில் தற்போது நிலவி வரும் உலக சந்தை பொருளாதாரம் பற்றி அறியாமல் மத்திய அரசு ஜிஎஸ்டி வரியை நடைமுறைப்படுத்தி உள்ளது வியப்பளிக்கிறது. ஊறுகாய், பிஸ்கெட், கடலைமிட்டாய், நாப்கின், பிரெய்லி புத்தகங்கள் போன்றவற்றுக்கு அதிகமான வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பொருள்களின் விலை உயர்வதுடன் தொழில்கள் நலியும் நிலை உருவாகி உள்ளது.
ஜிஎஸ்டியால் கார்களின் விலைகள் குறைந்துள்ளன. மாருதி கார் நிறுவனம் தனது கார்களின் விலையை 3 சதவீதம் குறைத்து உள்ளது. இதனால் ஏழை எளிய மக்களுக்கு எதுவும் பயனில்லை. தமிழகத்தில் சுமார் 2 கோடி பேர் அன்றாடம் உணவு விடுதியில் சாப்பிடுகிறார்கள். புதிய சட்ட அமலாக்கத்தால் ஹோட்டல்களில் சாப்பாடு விலை 18 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
பன்னீர், சோப்பு, மசாலா தூள்கள், நெய், ஆடை விலை, வங்கி சேவை கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன. இதுவரையில் வரிவிலக்கு பெற்று வந்த 500-க்கு மேற்பட்ட பொருள்களுக்கு புதிதாக வரிவிதிக்கப்பட்டுள்ளது, சில பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது. வரி குறைப்பால் விலையில் ஏற்படும் மாற்றத்தை தங்களது லாபமாக மாற்றிக்கொள்ளும் கார்ப்பரேட்டுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். ஆனால் இச்சட்டத்தில் அதற்கான விதிமுறைகள் வகுக்கப்படவில்லை. அதனால் சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் பலன், மக்களுக்கு செல்லாமல் கார்ப்ரேட்டுகளின் கைகளுக்குச் செல்கிறது, இதையும் நாம் எண்ணி பார்க்க வேண்டும்.
ஜிஎஸ்டி மூலம் உலகிலேயே அதிக வரிவிதிக்கப்படும் நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது. வளர்ச்சி அடைந்த நாடுகள் என்று சொல்லப்படும் உலக நாடுகளில் அதிகபட்சமாக 18 சதவீத அளவிற்கே சரக்கு சேவை வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் அது 28 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சில பொருட்களுக்கு 32 சதவீதம் வரை வரி நிர்ணயிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக அறிகிறோம்.
தற்போது ஆஸ்திரேலியா 10%, பஹரைன் 5 சதவீதம், மலேசியா 6 சதவீதம், மொரிஷியஸ் 15 சதவீதம், மெக்சிகோ 16 சதவீதம், மியான்மர் 3 சதவீதம், பிலிட்பைன்ஸ் 12 சதவீதம், ரஷ்ய கூட்டமைப்பு நாடுகள் 18 சதவீதம், சிங்கப்பூர் 7 சதவீதம், தென்னாபிரிக்கா 14 சதவீதம், தாய்லாந்து 7 சதவீதம், ஐக்கிய அரசு அமீரக நாடுகள் 5 சதவீதம், அமெரிக்கா 7.5 சதவீதம், வியட்நாம் 10 சதவீதம், ஜிம்பாப்வே 15 சதவீதம் என்ற அளவிலேயே அதிகபட்ச ஜிஎஸ்டி வரிவிதிப்பை கொண்டுள்ளன.
ஆனால் ஏழைகள் அதிகம் இருக்கும் இந்தியா 28 சதவீத ஜிஎஸ்டி வரிவிதிப்பை அமல்படுத்தி உள்ளது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஜிஎஸ்டி வரி விதிப்பதற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள் குறிப்பாக தமிழகத்தில் தூத்துக்குடி, விருதுநகர், கோவில்பட்டி போன்ற இடங்களில் தீப்பெட்டி ஆலைகள் மூடப்பட்டுள்ளதால் 100 கோடி மதிப்பிலான தீப்பெட்டிகள் தேக்கம் அடைந்து உள்ளன. 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
இந்திய தீப்பெட்டி உற்பத்தியில் 85 சதவீதம் தூத்துக்குடி, கோவில்பட்டி, விருதுநகர், சிவகாசி, சங்கரன்கோவில், குடியாத்தம் போன்ற பகுதிகளில் தீப்பெட்டி தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. பட்டாசு மீதான ஜிஎஸ்டி வரியை 28 சதவித்திலிருந்து 12 சதவீதமாகக் குறைக்க சிவகாசியில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
அதே போல ஏழாயிரம் பண்ணை, சாத்தூர் போன்ற பகுதிகளில் தீப்பெட்டி தொழிற்சாலைகள் மூடப்பட்டு, ஜிஎஸ்டிக்கு எதிராக தொழிலாளர்கள் போராட்டம் வலுப்பெற்று வருகிறது ஆகவே மத்திய அரசு தொழிலாளர், விவசாய, ஏழை எளிய, நடுத்தர மக்களை பாதிக்கும் ஜிஎஸ்டி வரியை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்வதோடு போராடி வரும் அனைத்து தரப்பினருக்கும் அதிமுக ஜெ.தீபா அணி என்றும் துணை நிற்போம். தொழிலாளர்களின் உரிமைக்கு குரல் கொடுப்போம்'' என்று தெரிவித்துள்ளார்.