பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் குழந்தைகளுக்கு போடப்பட்ட தொற்றுநீக்கம் (ஆன்டிபயாடிக்) ஊசியால் 15 குழந்தைகள் உடல் நிலை பாதிக்கப்பட்டதாகக் கூறப் படுகிறது.
பொள்ளாச்சியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவில், பிறந்த குழந்தை முதல் 10 வயதுக்கு உட்பட்ட 40-க்கும் மேற்பட்ட குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல குழந்தைகளுக்கு தொற்றுநீக்கத்துக்கான ஊசி போடப்பட்டுள்ளது. சிறிது நேரத்தில், 15 குழந்தைகளுக்கு குளிருடன் கூடிய உடல்நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து குழந்தைகளை பரிசோதித்து மருத்துவர்கள் மாற்று மருந்து அளித்துள்ளனர். அதில் அதிகம் பாதிப்புக்கு உள்ளான 9 மாதக் குழந்தை மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் கலைச்செல்வி கூறும்போது, ‘‘இந்த மருத்துவமனையின் குழந்தை கள் பிரிவில் உள்ள குழந்தைகளுக்கு தொற்றுநீக்கம் ஊசி போடப்பட்டதும், சிறிது நேரத்தில் சில குழந்தைகளுக்கு குளிர் மற்றும் உடல் நடுக்கம் ஏற்பட்டது. உடனடியாக மாற்று மருந்து தரப்பட்டது. தற்போது அனைத்து குழந்தைகளும் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். யாருக்கும் பாதிப்பு இல்லை. முறையான சிகிச்சை தொடர்கிறது.
மருந்தின் பயன்பாடு நிறுத்தம்
குழந்தைகளுக்கு போடப்பட்ட மருந்தின் ‘பேட்ச்’ குறித்து சுகாதாரத் துறை உயர் அதிகாரி களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அந்த ‘பேட்ச்’ மருந்தின் பயன்பாடு நிறுத்தி வைக்கப்படும். மருந்தின் மாதிரி ஆய்வுக்கு உட்படுத்தப்படும்’’ என்றார்