தமிழகம்

ஆதரவு எம்எல்ஏக்களுடன் டிடிவி தினகரன் திடீர் ஆலோசனை

செய்திப்பிரிவு

அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ஆதரவு எம்எல்ஏக்கள் 7 பேரை சந்தித்து திடீர் ஆலோசனை நடத்தினார்.

அதிமுக அம்மா அணியில் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தினகரன் மற்றும் அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி சார்பில் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியாக அறிவித்தனர்.

சமீபத்தில் பெங்களூர் சிறையில் சசிகலாவை சந்தித்தார் தினகரன். அப்போது அடுத்த மாதம் 5-ம் தேதி வரை பொறுமையுடன் இருக்குமாறு சசிகலா தன்னிடம் கூறியதாகவும், அதன் பிறகு தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என்றும் தினகரன் அறிவித்தார்.

இந்நிலையில், சென்னையில் உள்ள இல்லத்தில் தனது ஆதரவு அதிமுக எம்எல்ஏக்களுடன் தினகரன் நேற்று திடீர் ஆலோசனை நடத்தினார். இச்சந்திப்பில் முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜி மற்றும் 6 எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம், அதிமுக அம்மா அணியின் செய்தித் தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் ஆகியோரும் தினகரனை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

ஜனாதிபதி தேர்தலில் நேற்று எம்எல்ஏக்கள் வாக்களித்த நிலையில் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் அவரை திடீரென சந்தித்து பேசி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

SCROLL FOR NEXT