மூளைச்சாவு அடைந்த லயோலா கல்லூரி பேராசிரியரின் உடல் உறுப்புகள் தானத்தால் 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.
சென்னை அடுத்த கும்மிடிப்பூண்டியில் வசித்து வந்தவர் பாலமுத்து முருகன் (33). லயோலா கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வந்தார். இவருக்கு லினி அகஸ்டின் என்ற மனைவியும், 6 வயது மற்றும் 2 வயதில் பெண் குழந்தைகளும் உள்ளனர். கடந்த 2-ம் தேதி இரவு 7 மணி அளவில் கும்மிடிப்பூண்டி அருகே பாலமுத்து முருகன் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த பைக் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்த அவர் உடனடியாக பொன்னேரியில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இதையடுத்து, அவர் 3-ம் தேதி பிற்பகல் 2.30 மணி அளவில் வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று அதிகாலை 1.30 மணி அளவில் அவர் மூளைச் சாவு அடைந்தார். கணவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய விரும்புவதாக மனைவி லினி அகஸ்டின் டாக்டர்களிடம் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து டாக்டர்கள் குழுவினர் அறுவை சிகிச்சை செய்து அவரது உடலில் இருந்து சிறுநீரகங்கள், கல்லீரல், இதயம் மற்றும் கண்களை எடுத்தனர். சிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தவருக்கு ஒரு சிறுநீரகத்தை டாக்டர்கள் பொருத்தினர். சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவ ருக்கு மற்றொரு சிறுநீர கம்,அப்போலோ மருத் துவமனையில் சிகிச்சை யில் இருந்தவருக்கு கல்லீரல், ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு இதயமும் வெற்றிகரமாக பொருத்தப்பட்டன. கண்கள் இரண்டு பேருக்கு பொருத்துவதற்காக எஸ்ஆர்எம் கண் வங்கிக்கு கொடுக்கப்பட்டன. பேராசிரியர் பாலமுத்து முருகனின் உடல் உறுப்புகள் தானத்தால் 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.