சென்னையில் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. மேலும், வட தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 3 மாதங்களாக தமிழகம் முழுவதும் கடும் வெப்பம் தாக்கி வந்ததால், பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
இதேபோல் சென்னையிலும் கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை அதிகாலை வரை விடிய விடிய கொட்டித் தீர்த்தது. அதன் காரணமாக சாலைகளில் மழைநீர் கரைபுரண்டு ஓடியது. இதனால் காலை நேரத்தில் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாயினர்.
சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது: மேற்கு திசைக் காற்றில் ஏற்பட்ட வேக மாறுபாடு மற்றும் வெப்பச் சலனம் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் தனித்தனி மேகக் கூட்டங்கள் உருவாகி ஒன்றோடு ஒன்று இணைந்து, கிழக்குத் திசையில் நகர்ந்து சென்றன. இவை ஈரப்பதத்துடன் கூடிய கடல் காற்றுடன் இணைந்ததன் காரணமாக வட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
இதன்படி, நேற்று காலை 8.30 மணிக்கு எடுக்கப்பட்ட மழை அளவின்படி எண்ணூர், செம்பரம்பாக்கத்தில் தலா 9 செமீ, பூந்தமல்லியில் 7 செமீ, திருவள்ளூர், சென்னை விமான நிலையத்தில் தலா 6 செமீ, பொன்னேரி, காஞ்சிபுரம், அரக்கோணம், திண்டிவனம், சோழவரம், தாமரைப்பாக்கத்தில் தலா 5 செமீ, பூண்டி, திருத்தணி, திருவாலங்காடில் தலா 4 செமீ, செங்கல்பட்டு, ஆவடி, வந்தவாசி, மாமல்லபுரம், செங்குன்றம், ஆரணி, பரங்கிப்பேட்டை, உத்திரமேரூர், செஞ்சி, மாதவரத்தில் தலா 3 செமீ மழை பதிவானது.
அடுத்த இரு தினங்களுக்கு வெப்பச் சலனம் காரணமாக வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை, இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இவ்வாறு அவர் கூறினார்.