குட்கா ஊழல் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று பாமக சார்பில் நடந்த ஆர்ப் பாட்டத்தில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி வலியுறுத்தினார்.
இந்தக் கோரிக்கையை வலி யுறுத்தி பாமக சார்பில் சென்னை யில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஜி.கே.மணி பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:
சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரி களின் ஆதரவுடன் தடை செய்யப் பட்ட குட்கா தமிழகத்தில் தாராள மாக விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக அவர்களுக்கு லஞ்சமும் கொடுக்கப்பட்டது பற்றி ‘தி இந்து’ நாளிதழ் ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டுள்ளது. குட்கா ஊழல் குறித்து தமிழக காவல் துறை விசாரித்தால் உண்மை வெளிவராது. அதனால் சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.
தமிழக அரசு உத்தரவிட வில்லை என்றால், சிபிஐ தாமாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும். இதற்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு தர வேண் டும். ஊடகங்கள் சுதந்திர தன்மை யோடு ஜனநாயகத்தை காக்க செய்தி வெளியிடுவது வரவேற்கத் தக்கது. செய்தி வெளியிட்ட ஊடகங்கள் மீது வழக்கு பதிவு செய்வது, தாக்குதல் நடத்துவது ஜனநாயக படுகொலையாகும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, சென்னை மாவட்ட அமைப்புச் செயலாளர் மு.ஜெயராமன் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
பாமக நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீஸார் அனுமதி தரவில்லை. அதனால் தடையை மீறி போராட்டம் நடந்தது. அப்போது அங்கு வந்த போலீஸார் அவர்களை கைது செய்வதாக தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, சிறிது நேரத்தில் அனைவரும் கலைந்து சென்றனர்.