தமிழகம்

விளைநிலங்களில் மதுக்கடைகள் திறப்பு: நெல்லை விவசாயிகள் அதிருப்தி

செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டத்தில் கால்வாய் கரைகள், விளைநிலங்களில் புதிதாக மதுக்கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன. இதனால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள மதுக்கடைகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் பெரும்பாலான மதுக்கடைகள் அடைக்கப்பட்டன. ஆனால் ஒரு சில இடங்களில் தற்போதும் சாலையோரங்களில் மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. அடைக்கப்பட்ட மதுக்கடைகளுக்கு பதிலாக வேறு இடங்களில் புதிதாக மதுக்கடைகள் திறக்க அதிகாரிகள் துரிதம் காட்டி வருகின்றனர்.

குடியிருப்புகளுக்கு மத்தியில் மதுக்கடைகள் திறக்க மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எனவே விளை நிலங்களிலும், கால்வாய் கரைகளிலும் மதுக்கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன. திறந்தவெளி மதுக்கூடமாகவும் விளை நிலங்கள் மாற்றப்பட்டு வருகின்றன. ஆளுங்கட்சி பிரமுகர்கள் பலரும் மதுக்கூடம் அமைத்து பணம் பார்க்க தொடங்கிவிட்டனர்.

வண்ணார்பேட்டை

திருநெல்வேலியில் வண்ணார்பேட்டை தெற்கு புறவழிச்சாலையில் இருந்த

4 மதுக்கடைகள் அடைக்கப்பட்ட நிலையில், தற்போது புதிய மதுக்கடைகள் விளை நிலங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் திருநெல்வேலி- திருச்செந்தூர் ரயில்வே தண்டவாளத்தை ஒட்டி மீண்டும் மதுக்கடை திறக்கப்பட்டுள்ளது. இந்த கடை மற்றும் மதுக்கூடத்துக்கு அப்பட்டமாக விதிமுறைகளை மீறி அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியினரும், சமூக ஆர்வலர்களும் குற்றம்சாட்டுகின்றனர்.

நெல் விளையும் பூமி

இதுகுறித்து பாளையங்கோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் டிபிஎம் மைதீன்கான் கூறும்போது, “தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில சாலைகளில் இருந்து 500 மீட்டர் தூரத்துக்குள் மதுக்கடை அமையக்கூடாது என உத்தரவு உள்ளது. ஆனால் தற்போது வண்ணார்பேட்டையில் திறக்கப்பட்டுள்ள கடை, தெற்கு புறவழிச் சாலையை ஒட்டி வெறும் 50 மீட்டர் தூரத்துக்குள் அமைந்துள்ளது.

இந்த கடை அமைந்துள்ள நிலமானது பாளையங்கால்வாய் மற்றும் கால்வாயில் வரும் தண்ணீர் மூலம் பிசான, கார் சாகுபடி என, இருபோக நெல் விளையும் பூமி. விளைநிலத்தில் இத்தகைய கட்டுமானங்கள் அமைவதற்கு வருவாய்த் துறையில் அனுமதி பெறப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுகிறது.

மேலும் இந்த கடை திறந்தபின் கடந்த ஒரு வாரமாக வண்ணார்பேட்டை தெற்கு புறவழிச் சாலையின் அணுகுசாலை பகுதியில் விபத்துகள் அதிகம் நடந்துள்ளன. அந்த இடத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். ரயில்வே தண்டவாளத்தை ஒட்டி மதுக்கடை அமைந்திருப்பதால், தடுப்புச் சுவர் இல்லாத சூழலில் அங்கு மது அருந்துவோர் ரயில் விபத்துகளில் சிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே அந்த கடையை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது” என்றார் அவர்.

இதுபோல் திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் இருந்து மேலப்பாளையம் செல்லும் சாலையில் விளை நிலத்தில் புதிதாக மதுக்கடை திறக்கப்பட்டுள்ளது. குறிச்சி முக்கில் பாளையங்கால்வாயை ஒட்டி விளை நிலத்தில் மற்றொரு மதுக்கடை திறக்கப்பட்டுள்ளது. இந்த மதுக்கடை களுக்கு வருவோர் அருகிலுள்ள விளை நிலங்களை திறந்த வெளி மதுக்கூடமாக மாற்றிவிட்டனர். மது பாட்டில்களை விளைநிலங்களில் வீசிவிட்டு செல்கின்றனர். இதனால் அருகில் உள்ள விளைநிலங்களில் விவசாயம் மேற்கொள்ள முடியாத சூழல் உருவாகியிருக்கிறது.

ஏற்கெனவே திருநெல்வேலி மாவட்டத்தில் வறட்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நெல் விவசாயம் கேள்விக்குறியாகி இருக்கும் சூழ்நிலையில், விளைநிலங்களில் மதுக்கடைகளை திறக்க அதிகாரிகள் அனுமதி கொடுப்பது அதிர்ச்சி அளிப்பதாக விவசாய பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.

குற்றாலமும் தப்பவில்லை

இதுதொடர்பாக திருநெல்வேலி மாவட்ட விவசாய சங்க செயலாளர் பி.வேலுமயில் கூறும்போது, “திருநெல்வேலி மாநகர பகுதியில் மட்டுமின்றி மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் விளை நிலங்களில் மதுக்கடைகளை அமைத்து வருகின்றனர். குற்றாலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பாசன வசதி பெரும் கால்வாயையொட்டி மதுக்கடை திறந்துள்ளனர். இங்கு மது குடிப்போர் பாட்டில்களை கால்வாய்க்குள் வீசிவிட்டு செல்கின்றனர். இதனால் அங்கு விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாத சூழ்நிலை உருவாகியிருக்கிறது” என்றார் அவர்.

SCROLL FOR NEXT