தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தை விட்டு ஓஎன்ஜிசி நிறுவனமும், போலீஸாரும் வெளியேற வேண்டும் என்பதை வலியுறுத்தி அப்பகுதி மக்கள் நேற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கதிராமங்கலத்தில் விவசாயமும், குடிநீரும் பாழ்பட்டுப் போனதற்கு ஓஎன்ஜிசி நிறுவனம்தான் காரணம் எனக் குற்றம்சாட்டியுள்ள அப்பகுதி மக்கள், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காகப் போராடிய, மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன் உட்பட 10 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், கதிராமங்கலத்திலும், வெளியூர்களில் இருந்து இங்கு வருவதற்கான 4 எல்லைகளிலும் போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்கள், ஊருக்குள் வரும் வெளியூர் நபர்களை தீவிரமாக விசாரித்த பிறகே அனுப்புகின்றனர்.
இந்நிலையில், ஓஎன்ஜிசி நிறுவனமும், போலீஸாரும் கதிராமங்கலத்தை விட்டு வெளியேற வேண்டும், கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி, கதிராமங்கலம் மக்கள் கடந்த 6 நாட்களாக அங்குள்ள அய்ய னார் கோயில் பகுதியில் காத் திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
கதிராமங்கலத்தில் 10 தெருக்கள் உள்ளன. ஒரு தெருவுக்கு 4 ஆண்கள், 4 பெண்கள் என மொத்தம் 80 பேர் கொண்ட போராட்டக் குழு நேற்று முன்தினம் இரவு அமைக்கப்பட்டது. இந்தக் குழு,
அடுத்த கட்ட போராட்டம் குறித்து ஆலோசிக்கவும், அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தவும் ஏற்படுத்தப் பட்டுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
பழ.நெடுமாறன் எச்சரிக்கை
தஞ்சாவூர் மாவட்டம் கதிரா மங்கலத்தில் கடந்த ஜூன் 30-ம் தேதி நடைபெற்ற பொதுமக்களின் போராட்டத்தையடுத்து, மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் நேற்று சந்தித்துப் பேசினார். பின்னர் அவர் அளித்த பேட்டி:
கதிராமங்கலம் போராட்டத்துக்கு தலைமை வகித்ததற்காக பேராசிரியர் ஜெயராமன் மீது கொலைமுயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் பொய் வழக்குகளை பதிவு செய்துள்ளனர். கதிராமங்கலம் போராட்டம், யாரும் தூண்டிவிட்டு நடத்தப்படவில்லை. மக்கள் தன்னெழுச்சியாக போராடி வருகின்றனர். எண்ணெய்க் கசிவால் அவர்களின் நிலங்களும் குடிநீரும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, வாழ்வுரிமையை காக்க போராடி வருகின்றனர்.
கதிராமங்கலத்தில் காவல் துறையின் அடக்குமுறை அதிகமாக உள்ளது. அனைத்து சாலைகளிலும் அதிகளவில் போலீஸாரை நிறுத்தி, அங்கு செல்லக்கூடிய அனைவரையும் தீவிரமாக சோதனையிடுகின்றனர். போலீஸாரை உடனே திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.