தமிழகம்

தாது மணல் எடுப்பதை தடுக்க சிறப்பு பறக்கும் படை; நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்: ஸ்டாலின் புகாருக்கு முதல்வர் பழனிசாமி விளக்கம்

செய்திப்பிரிவு

சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தாது மணல் விவகாரம் குறித்து அரசு நடவடிக்கை எடுக்கும் என முதல் வர் கே.பழனிசாமி தெரிவித்துள் ளார். தாது மணல் எடுப்பதைத் தடுக்க சிறப்பு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து, ‘‘தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, மதுரை உள் ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள 81-க்கும் மேற்பட்ட தாது மணல் குவாரிகளில் முறைகேடு தொடர்ந்து நடந்து கொண்டிருப்ப தாக செய்திகள் வந்து கொண்டி ருக்கின்றன. ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப் சிங் பேடி தலைமை யிலான குழு நேரில் ஆய்வு செய்து கடந்த 2013 செப்டம்பர் 17-ல் அன்றைய முதல்வர் ஜெயலலிதாவிடம் அறிக்கை அளித்தது. அறிக்கையை பெற்றுக் கொண்ட அவர், பெரும் மணல் குவாரிகள் குறித்து கொள்கை முடிவு எடுக்கப்படும் என அறிவித்தார். ஆனால், 4 ஆண்டுகள் கடந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

அவருக்கு பதிலளித்து முதல்வர் கே.பழனிசாமி பேசியதாவது:

தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதிகளில் அனுமதியின்றி தாது மணல் வெட்டியெடுப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் இருந்து அறிக்கை பெறப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த 2013-ல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கனிம சுரங்க குத்தகை பகுதிகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப் சிங் பேடி தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டது. பின்னர் நெல்லை, கன்னியாகுமரி, திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களிலும் இக்குழு ஆய்வு மேற்கொண்டது.

அதனைத் தொடர்ந்து தூத்துக் குடி, நெல்லை, கன்னியாகுமரி, மதுரை, திருச்சி மாவட்டங்களில் தாது மணல் வெட்டியெடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. நடை சீட்டு வழங்குவதும் நிறுத்தப்பட்டுள்ளது. ககன்தீப் சிங் பேடியின் ஆய்வறிக்கை பெறப்பட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு செப்டம்பர் 4-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

தாது மணல் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றத்தின் ஆலோசகராக கடந்த 2016-ல் வி.சுரேஷ் நியமிக்கப்பட்டார். தாது மணல் தொடர்பான ஒரு பொதுநல வழக்கில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி, ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் சத்யப்ரதா சாகு தலைமையில் இந்திய அணுசக்தி துறை. சுங்கம், கலால், கனிமம், சுரங்கம், வருவாய், நில அளவை ஆகிய துறைகளின் அலுவலர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. தற்போது இக்குழு கடற்கரை மாவட்டங்களில் தாது மணல், அணுசக்தி கனிமங்கள் இருப்பு குறித்து ஆய்வு செய்து வருகிறது. தாது மணல் படிவு பகுதிகளைச் செயற்கைக்கோள் மூலம் கண்காணித்து அறிக்கை தரவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அனுமதியின்றி தாது மணல் எடுப்பதைத் தடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களைக் கொண்ட சிறப்பு பறக்கும் படை அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஆலோசகர் வி.சுரேஷ், தனது அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். இந்த வழக்குகளில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT