நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு சுற்றுலா தலங்களை சுற்றுலா துறை தவறவிடும் நிலையில், அந்த வாய்ப்புகளை தனியார் அமைப்புகள் பயன்படுத்தி வருகின்றன.
ஏழைகளின் காஷ்மீர் என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர் ஆகிய பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். இதனையே, ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகள் கண்டு செல்கின்றனர். சலிப்பு ஏற்பட்டு வருவதால், சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.
இதுதொடர்பாக நீலகிரி மாவட்ட ஆவண மைய நிர்வாகி வேணுகோபால் கூறும்போது, “நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா குறித்து இதுவரை திட்டம் வரையறுக்கப்படவில்லை. உதகையை மட்டுமே கருத்தில் கொள்ளாமல் குன்னூர், கூடலூர், கோத்தகிரி, குந்தா பகுதிகளிலும் சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும்.
சுற்றுலாவை தரம் பிரித்து மருத்துவம், விளையாட்டு சுற்றுலாக்களை திட்டமிட வேண்டும். உதகையில் கேபிள் கார் திட்டம் குறித்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சுற்றுலா பயணிகளை கவர பல வாய்ப்புகள் இருந்தும், அவற்றை சுற்றுலா துறை தவறவிடுகிறது” என்றார்.
கேபிள் கார் திட்டம் கானல்நீராக உள்ள நிலையில், தொட்டபெட்டா பகுதியில் தனியார் தேயிலை தொழிற்சாலை வளாகத்தில் கேபிள் கார் போன்ற ஜிப் லைன் சாகச விளையாட்டு தொடங்கப்பட்டுள்ளது. மேலும், தேயிலை உற்பத்தியை சுற்றுலா பயணிகள் நேரில் காண வழி வகை செய்கிறது. ஆனால், உதகை கூடலூர் சாலை நடுவட்டத்தில் டான்டீ நிறுவனத்தில் உள்ள தேயிலை அருங்காட்சியகத்தில் பெயரளவுக்கு சில குறிப்புகள் மட்டுமே வைக்கப்பட்டுள்ளன.
உதகையில் தனியார் சார்பில் சர்வதேச தரத்திலான மெழுகுச் சிலைகள் அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது. இதில் மகாத்மா காந்தி, பிரதமர் மோடி, அன்னை தெரசா, அமெரிக்க அதிபர் டிரம்ப், முன்னாள் அதிபர் ஒபாமா, ஹாலிவுட் நடிகர்கள் மைக்கேல் ஜாக்சன், ஜாக்கிசான், ஜெட் லீ, அர்னால்ட், இளவரசி டயானா, கால்பந்து வீரர்கள் மெஸ்சி, ரொனால்டோ உட்பட 32 பேரின் மெழுகுச் சிலைகள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. மற்ற சுற்றுலா தலங்களை கண்டு சலித்துப்போன சுற்றுலா பயணிகளுக்கு, இவற்றின் மூலமாக புதிய அனுபவங்கள் கிடைக்கின்றன.
சுற்றுலா துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘சுற்றுலா துறைக்கு நிதி ஒதுக்கீடு குறைவு. கோடை விழா நடத்த பல லட்சங்கள் செலவாகும் நிலையில், சொர்ப்ப அளவிலான நிதியே ஒதுக்கப்படுகிறது. கேபிள் கார் உட்பட பிற திட்டங்களுக்கு பாதுகாப்பு மற்றும் கோடிக்கணக்கான நிதி தேவை என்பதால், அரசுதான் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
நீலகிரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதி வனம். இங்கு எந்த திட்டத்தை செயல்படுத்தி னாலும், வனத்துறையின் அனுமதி பெற வேண்டும். இது சவாலான காரியம்” என்றனர்.