மாமல்லபுரம் அருகே கோவளம் கடலில் மூழ்கி மருத்துவக் கல்லூரி மாணவர் உட்பட இருவர் நேற்று முன்தினம் உயிரிழந்தனர். மாயமான ஒருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னை, திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்தவர் பிருதிவிராஜன்(35). இவர் தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் பல் மருத்துவம் முடித்துவிட்டு பயிற்சி மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை நண்பர்களுடன் கோவளம் கடற்கரைக்குச் சென்றார். அங்கு குளித்துக் கொண்டிருக்கும்போது பிருதிவிராஜன் கடல் அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டார்.
இதேபோல் தனியார் பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் 10 பேர் நேற்று முன்தினம் மாலை கோவளம் கடற்கரைக்கு வந்தனர். அவர்கள் கடலில் உற்சாக மாக குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது வந்த ராட்சத அலையில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஹென்றி ஜோசப்(18), ராகேஷ்(18) ஆகிய 2 மாணவர்கள் சிக்கினர். அருகில் இருந்தவர்கள் காப்பாற்ற முயன்றும் அலை அவர்களை இழுத்துச் சென்றது.
கடல் அலைக்குள் இழுத்துச் செல்லப்பட்டவர்களில் பயிற்சி மருத்துவர் பிருதிவிராஜன் உடல் கோவளம் பகுதியிலேயே நேற்று கரை ஒதுங்கியது. ஹென்றி ஜோசப் சடலம் கானாத்தூர் அருகே கரை ஒதுங்கியது. ராகேஷ் சடலத்தை அப்பகுதி மீனவர்கள் உதவியுடன் போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர். இது தொடர்பாக கேளம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.