இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் சென்னை, எண்ணூர் காமராஜர் துறைமுகங் களில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை மத்திய சாலை போக்கு வரத்து தேசிய நெடுஞ்சாலைத் துறை மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டார்.
கூட்டத்தில் தற்போது நடை பெற்று வரும் திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார். தமிழக நெடுஞ் சாலை மற்றும் சிறு துறைமுகத் துறை செயலாளர் ராஜீவ்ரஞ்சன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இது தொடர்பாக தேசிய நெடுஞ் சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘மத்திய அமைச்சரு டன் நடந்த கூட்டத்தில் தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டு இருக்கும் நெடுஞ்சாலைத் திட்டம் குறித்து விரிவாகப் பேசினோம். அதில் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து விவாதிக்கப்பட்டது.
பெருங்களத்தூரில் இருந்து செங்கல்பட்டு வரையில் உயர்மட்ட சாலை தொடர்பான முழு திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதேபோல், செங்கல்பட்டு திண்டிவனம் இடையே தற்போதுள்ள சாலையை எண்வழிச் சாலையாக விரிவாக்கம் செய்ய ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னை துறைமுகம் மதுரவாயல் உயர்மட்ட சாலையில் தமிழக அரசின் கோரிக்கைகளை ஏற்று சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்த சில மாதங் களில் கட்டுமானப் பணிகள் தொடங் கப்படும். இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தும்போது போக்கு வரத்து நெரிசலைக் குறைக்க முடி யும். இவ்வாறு அவர்கள் கூறினர்.