சட்டப்பேரவையில் நேற்று ஒரே நாளில் பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர் நியமனம், வீட்டு வாடகையை முறைப்படுத்துதல் உட்பட 25 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
துறை வாரியான மானியக் கோரிக்கைகளை நிறைவேற்று வதற்காக தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த ஜூன் 14-ம் தேதி தொடங்கியது. மானிய கோரிக் கைகள் விவாதத்துக்கு இடையே அவ்வப்போது பல்வேறு துறை களின் சார்பில் சட்டத் திருத்தம் மசோதாக்கள் அறிமுகப்படுத்தப் பட்டன. பேரவை கூட்டத்தொடரின் இறுதி நாளான நேற்று, இந்த மசோதாக்கள் பிரிவுவாரியாக ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப் பட்டு, பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.
தமிழகத்தில் உள்ள சென்னை, அண்ணா, அண்ணாமலை, மதுரை காமராஜர், மீன் வளம், கால்நடை மருத்துவம், உடற்கல்வி, சட்டம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனத்துக்கான தேர்வுக்குழு நியமனம், தகுதிகள், காலவரையறை தொடர்பாக பல்கலைக்கழக சட்டங்களில் திருத்தம் செய்து கொண்டுவரப் பட்ட மசோதாக்கள் நிறைவேற்றப் பட்டன.
துணைவேந்தர் பதவி காலியா வதற்கு 6 மாதங்களுக்கு முன்பு தேர்வுக் குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும். அப்பணி 4 மாதங்களுக்கு முன் முடிய வேண்டும். துணைவேந்தர் பதவிக்கு தகுதியானவர்கள் பட்டியலை தயாரிக்கும் நடை முறையை 4 மாதங்களுக்கு முன் தொடங்க வேண்டும். குழு அமைக் கப்பட்ட 4 மாதங்களில் பல்கலைக் கழக வேந்தருக்கு பரிந்துரையை அனுப்ப வேண்டும் என அந்த மசோதாக்களில் தெரிவிக்கப்பட்டி ருந்தது.
தமிழகத்தில் கட்டிடங்களின் வாடகையை முறைப்படுத்த புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ‘தமிழ்நாடு கட்டிடங்கள் குத்தகை மற்றும் வாடகை கட்டுப்பாடு சட்டம்’ கடந்த 1960-ம் ஆண்டில் கொண்டு வரப்பட்டது. தற்போது கட்டுமானத் தொழில் வளர்ந்துவிட்டது. குடியி ருப்புகள், வணிக கட்டிடங்கள் அதிகரித்துள்ளன. பழைய வாடகை கட்டுப்பாடு சட்டம், தற்போதைய சூழலுக்கு பொருத்த மானதாக இல்லை. இதுதவிர, நடைமுறையில் உள்ள வாடகை கட்டுப்பாடு சட்டம், நில உரிமை யாளரின் நலனுக்கு எதிராக உள்ளது. எனவே, இந்த சிக்கல் களை தீர்க்கும் வகையில் பழைய குத்தகை, வாடகை கட்டுப்பாடு சட்டத்தை நீக்கி, புதிய சட்டம் கொண்டுவர வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்நிலை யில், மத்திய அரசின் பரிந்துரையை ஏற்று, தமிழகத்தில் தற்போதுள்ள வாடகை கட்டுப்பாடு சட்டத்தை நீக்கவும், அதே நேரத்தில் தற்போதுள்ள சூழலுக்கேற்ப புதிய சட்டத்தை கொண்டுவரவும் தமிழக அரசு முடிவு செய்தது. அதற்கான சட்ட மசோதாவை வீட்டுவசதித் துறை அமைச்சர் உடுமலை ராதா கிருஷ்ணன் தாக்கல் செய்திருந்தார். அந்த மசோதாவும் நேற்று நிறைவேற்றப்பட்டது.
அதேபோல பள்ளிகளில் கட்டணம் வசூலிப்பதை முறைப் படுத்த அமைக்கப்பட்டுள்ள குழுவின் தலைவரை தேர்வு செய்ய, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியை ஆலோசிப்பது, பாரம்பரிய படகு மீனவர்களை பாதுகாக்கும் வகையில், கடல் எல்லையை வரையறுப்பதில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்குவது, திருமணம் முடிந்து 5 மாதங்களுக்கு பின்னரும் அதை பதிவு செய்யும் வகையில் திருமண பதிவு சட்டத்தில் திருத்தம் செய்வது ஆகிய மசோதாக்களும் நிறை வேற்றப்பட்டன.
அரசுப் பணியில் மாற்றுத்திற னாளிகளுக்கான இடஒதுக்கீட்டை 3 சதவீதத்தில் இருந்து 4 சதவீத மாக உயர்த்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் பணி நிபந்தனைகள் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தம், அரசு ஒப்பந்தப் புள்ளி களில் மின்னணு கொள்முதலை சேர்ப்பது, தென்னையில் இருந்து நீரா பானம் எடுத்து விற்பது, பீர் ஏற்றுமதி தொடர்பாக மதுவிலக்கு சட்டத்தில் திருத்தம் செய்வது, மின்தூக்கிகளுக்கு ஆண்டு தோறும் ஆய்வு செய்து உரிமம் வழங்கப்படுவதுபோல நகரும் படிக்கட்டுகளுக்கும் (எஸ் கலேட்டர்) நிறுவுதல், இயக்குதல் மற்றும் பராமரித்தலுக்கு உரிமம் வழங்குவது, தமிழ்நாடு வேளாண் விளைபொருள் சந்தைப்படுத்து வதை முறைப்படுத்துவது தொடர் பான சட்டத் திருத்தங்களும் நிறை வேற்றப்பட்டன.
இதுதவிர மதிப்பு கூட்டு வரி, தமிழ்நாடு சங்கங்களின் பதிவு, தொழில் நிறுவனங்களில் தேசிய மற்றும் பண்டிகை விடுமுறை திருத்தச் சட்டங்கள் உட்பட நேற்று ஒரே நாளில் 25 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. வேளாண்மை, வணிக வரிகள், எரிசக்தி, உயர்கல்வி, சுகாதாரம், நெடுஞ்சாலை, தொழில், காவல் உட்பட மொத்தம் 54 துறைகளுக்கு போதிய நிதி ஒதுக்க தமிழ்நாடு நிதி ஒதுக்க மசோதாவும் நேற்று அறிமுகம் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாக்கள் நிறைவேற் றப்பட்டபோது, திமுக உறுப்பி னர்கள் யாரும் அவையில் இல்லை. முன்னதாக, குட்கா விற்பனை தொடர்பான விவகாரத்தில் அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.