தமிழகம்

ஜிஎஸ்டி விவகாரத்தில் தமிழக அரசு துரோகம் செய்துவிட்டது: படப்பை பொதுக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

ஜிஎஸ்டி விவகாரத்தில் தமிழக அரசு மக்களுக்கு துரோகம் செய்துவிட்டது என்று எதிர்க்கட்சித் தலைவரும் திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

திமுக தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் நேற்று படப்பை அருகே உள்ள கரசங்கால் பகுதியில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலர் தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார். இக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியது:

மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது ஜிஎஸ்டியை கடுமையாக எதிர்த்தார். அவர் பிரதமர் ஆனதும் அதனை நிறைவேற்றுகிறார். இது தொடர்பாக வணிகர்களிடம், வியாபாரிகளிடம் கருத்து கேட்டு முடிவெடுக்குமாறு சட்டப்பேரவையில் நாங்கள் வலி யுறுத்தினோம். ஆனால் விவாதிக் காமல் அப்படியே தமிழக அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. இதனால் விலைவாசி உயரும். தமிழக மக்களுக்கு மிகப்பெரிய துரோகத்தை பழனிசாமி அரசு செய்துள்ளது.

தற்போது தமிழகத்தில் நடைபெறுவது மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சி கிடையாது. பேரங்கள் மூலம் இந்த ஆட்சி நடைபெற்று வருகிறது. கூவத்தூரில் சட்டமன்ற உறுப்பினர்களை சிறைபிடித்து அழைத்து வந்து எதிர்க்கட்சியே அவையில் இல்லாமல் வாக்கெடுப்பு நடை பெற்று இந்த ஆட்சி அமைந்துள்ளது. சுகாதாரத்துறை அமைச்சர் வீட்டில் நடைபெற்ற சோதனையில் ஆர்.கே.நகரில் ரூ.89 கோடி செலவிடப்பட்டதற்கான ஆதாரம் வெளியானது. இதுகுறித்து நாங்கள் விவாதிக்க அனுமதி கேட்டால் சட்டப்பேரவையில் அனுமதி கிடைப்பதில்லை. ஆதாரம் கொடுத் தாலும் எங்களுக்கான உரிமை மறுக்கப்பட்டு நாங்கள் வெளியேற் றப்படுகிறோம்.

அச்சத்தால் ஆதரவு

தமிழக அமைச்சர்கள் 9 பேர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. குடியரசுத் தலைவர் தேர்தலில் எந்தவித நிபந்தனையும் இல்லாமல் அதிமுகவில் உள்ள அணிகள் அனைத்தும் ஆதரவு தெரிவித்துள்ளன. வருமான வரித் துறைக்கு அஞ்சியும், மணல் கொள்ளை விவகாரத்தில் நடவடிக் கைக்கு அஞ்சியும் இதுபோல் ஓடி ஆதரவு தருகின்றனர்.

ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான காவல்துறை தலைவர் டி.கே.ராஜேந்திரனுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. கூவத்தூர் விவகாரம், குட்கா போதைப் பொருள் விவகாரம் வெளியே வரக்கூடாது என்பதற்காக இந்த பதவி நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நடக்கும் அநியாய ஆட்சிக்கு நாம் முடிவு கட்ட வேண்டும் என்றார் ஸ்டாலின். இக் கூட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

SCROLL FOR NEXT