தமிழகம்

தோல் தொழிற்சாலை கழிவுநீர் குழாயை குடியிருப்புகள் வழியாக கொண்டு செல்வதை எதிர்த்து வழக்கு

செய்திப்பிரிவு

தோல் தொழிற்சாலை கழிவுநீர் குழாயை கொடுங்கையூர் குடியிருப்பு பகுதிகள் வழியாக கொண்டு செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை வியாசர்பாடி எம்.கே.பி. நகரை சேர்ந்த எம்.வெங்கடேச பெருமாள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகியாக உள்ளேன். மாதவரத்தில் தோல் தொழிற்சாலைகள் உள்ளன. இதில் இருந்து கழிவுநீர் வெளியேறுவதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். பசுமைத் தீர்ப்பாயத்திலும் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம் தோல் தொழிற்சாலைக் கழிவுநீரை சுத்திகரிக்க பொது சுத்திகரிப்பு ஆலை அமைக்க வேண்டும் என்றும், அந்த ஆலையில் சுத்திகரித்த பின்னரே கழிவுநீரை வெளியேற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இதன்படி மாதவரம் தோல் தொழிற் சாலைகளின் கழிவுநீரை கொடுங்கையூ ரில் உள்ள பொது சுத்திகரிப்பு ஆலைக்கு கொண்டுவர குழாய் அமைக்கும் பணியை சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியம் மேற்கொண்டு வருகிறது. ஆனால் இந்த குழாயை கொடுங்கையூர் ஜம்புலிதெரு உள்ளிட்ட 11 தெருக்கள் வழியாக பதித்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு சுகாதார சீர்கேடுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே குடியிருப்பு பகுதிகள் வழியாக கழிவுநீர் குழாய் கொண்டுசெல்ல தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரி்த்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுதொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் 4 வாரத்துக்குள் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT