பாஜக மாநில பொதுக்குழுக் கூட்டத்தை பூந்தமல்லியில் 12-ம் தேதி நடத்த திட்டமிட்டிருப்பதாக அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் அவர் கூறியதாவது:
தமிழக பாஜக பொதுக்குழு கூட்டம் கடந்த மாதம் 26-ம் தேதி நடப்பதாக இருந்தது. அன்றைய தினம் தே.ஜ.கூட்டணி எம்.பி.க்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தேநீர் விருந்து ஏற்பாடு செய்திருந்ததால் தேசிய நிர்வாகிகள் வரமுடியாத சூழல் ஏற்பட்டது. இதனால், பொதுக்குழு கூட்டத்தை தள்ளிவைத்தோம்.
நவம்பர் முதல் வாரத்தில் பொதுக்குழுக் கூட்டம் நடத்தலாம் என்று கேட்டபோது, ஹரியாணா மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களில் பாஜக முதல்வர்கள் பதவியேற்பு நிகழ்ச்சிகள் நடப்பதாகவும், அதில் தமிழக பொறுப்பாளரான ராஜீவ் பிரதாப் ரூடி பங்கேற்கிறார் என்றும் தலைமை கூறியது. இதையடுத்து நவம்பர் 12-ம் தேதி மாநில பொதுக்குழுக் கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம்
இவ்வாறு அவர் கூறினார்.