தமிழகம்

பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவு செயல்படுவது எப்படி?- அமைச்சர் விளக்கம்

செய்திப்பிரிவு

பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் முறையான பயிற்சியும் அனுபவமும் மிக்க மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டு பணிபுரிகின்றனர் என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் தருமபுரி, சேலம் போன்ற மருத்துவமனைகளில் செயல்பட்டுவரும் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் பச்சிளம் குழந்தைகளின் இறப்பை பற்றி தவறான செய்தியை பலர் பத்திரிகைகளில் கூறி வருகிறார்கள்.

மக்களின் முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதலுடன் செயல்படும் தமிழக அரசு மருத்துவ சேவையில் மிகச் சிறப்பாகச் செயல்படும் முதன்மை மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. மாநிலத்தில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் தரமான மருத்துவ சேவை வழங்குவதை உறுதி செய்ய அரசு தொடர்ந்து பாடுபட்டுவருகிறது.

தமிழகத்தில் சுகாதாரம் மற்றும் தாய் சேய் நலனில் அரசு மருத்துவ நிலையங்களின் பங்கு மிகவும் சிறப்பாக இருப்பதன் காரணமாகத்தான், நாளொன்றுக்கு 1800க்கும் மேற்பட்ட பிரசவங்கள் அரசு மருத்துவ நிலையங்களில் நடைபெறுகின்றன. ஆண்டொன்றுக்கு சுமார் 6.8 லட்சம் குழந்தைகள் அரசு மருத்துவ நிலையங்களில் பிறக்கின்றன.

உண்மைநிலை இவ்வாறிருக்க, ஏதோ தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் எந்தவொரு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை என்றும், அரசு சுகாதார நிலையங்கள் சரியாக செயல்படவில்லை என்றும் தவறான அறிக்கைகளை சிலர் பத்திரிக்கைகளில் வெளியிட்டுவருகிறார்கள்.

தமிழகத்தில் 19 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுடன் இணைந்த 43 மருத்துவமனைகள், ஒரு பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை, 30 மாவட்ட தலைமை மருத்துவமனைகள், 240 வட்டம் மற்றும் வட்டம் சாரா மருத்துவமனைகள், 1751 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 8706 துணை சுகாதார நிலையங்கள், 134 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் சிறப்பாக செயல்படும் காரணத்தினால் பொதுமக்கள் தனியார் மருத்துவமனைகளை நாடாமல் அரசு மருத்துவநிலையங்களில் பிரசவங்கள் பார்ப்பதினால்தான் இந்தியாவிலேயே மிக அதிக விழுக்காடான பிரசவங்கள் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ நிலையங்களில் நடைபெறுகின்றன.

ஏனெனில், பிறக்கின்ற அனைத்து குழந்தைகளையும் மிகச் சிறப்பாக பராமரிக்கக்கூடிய அனைத்து வசதிகளும் அரசு மருத்துவமனைகளில் உள்ளதால் மட்டுமே தான் தாய்மார்கள் அரசு மருத்துவமனைகளை அதிக அளவில் நாடுகிறார்கள். அதுமட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளில் பிரசவம் முடிந்து அவர்களால் காப்பாற்ற முடியாத நிலையில் உள்ள பச்சிளம் குழந்தைகளையும் அரசு தாங்கி பிடித்து காப்பாற்றுகிறது.

மக்களின் முதல்வர் ஜெயலலிதாவின் தொலைநோக்கு மற்றும் வழிகாட்டுதலின்படி சிசு மரண விகிதத்தை குறைப்பதற்காக இந்தியாவிலேயே முதன்முறையாக பச்சிளம் குழந்தைகளை தொடர் சிகிச்சைக்காகவும் உயர் சிகிச்சைக்காகவும் எடுத்துச் செல்வதற்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட 37 பச்சிளம் குழந்தைகளுக்கான சிறப்பு அவசர கால ஊர்திகள், இன்குபேட்டர், வால்யூம் இன்ப்யூஷன் பம்ப், வென்டிலேட்டர், ஆக்சிஜன் சிலிண்டர், பல்ஸ் ஆக்சிமீட்டர், மல்டி பாராமீட்டர் போன்ற அதி நவீன உபகரணங்களுடன் தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் பச்சிளம்குழந்தைகள் பராமரிப்பு குறித்து 90 நாட்கள் பயிற்சியும், மேலும் 45 நாட்கள் அவசரகால பயிற்சியும் பெற்ற செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இத்திட்டத்தில் மட்டும், கடந்த மூன்று ஆண்டுகளில் இதுவரை 16,106 பச்சிளம் குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் உயர் சிகிச்சைக்கு எடுத்து செல்லப்பட்டு உயிர்காக்கப்பட்டுள்ளனர். இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது.

சிசு மரண விகிதம் என்பது உலக அளவில் மக்கள்தொகையில் ஒரு முக்கியமான சமுதாய சுகாதார குறியீடு. தற்போது, இந்தியாவின் சிசு மரண விகிதம் 40 ஆக இருக்க, தமிழ்நாடு ஏற்கனவே சிசு மரண விகிதத்தில் 21 என்ற நிலையை எட்டி பெரிய மாநிலங்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

தமிழ்நாட்டில் சிறப்பாக தாய் சேய் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் காரணத்தினால் 99.8 விழுக்காடு தாய்மார்களின் பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடைபெறுகின்றன. நாளொன்றுக்கு இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் நல்லமுறையில் பிறந்தாலும், பல காரணங்களினால் ஒரு சில நேர்வுகளில் பிரசவத்திற்குப் பின்பு உயிருக்குப் போராடும் நிலையில் சில குழந்தைகள் பிறக்கின்றன. இத்தகைய பச்சிளம் குழந்தைகளைக் காப்பதற்கென ஏற்படுத்திய பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு திட்டம் என்பது ஒரு மகத்தான திட்டம். இத்திட்டத்தைப் பற்றி சரியாக புரிந்து கொள்ளாமல், குறைகூறும் வகையில் பலர் அங்கு ஏற்படும் இறப்பைக் குறித்து தவறான அறிக்கைகளை வெளியிடுகிறார்கள்.

ஆரோக்கியமான பிரசவங்கள் நடக்கும்போது பிரசவம் முடிந்தவுடன் மருத்துவமனை விட்டு தாய்மார்கள் குழந்தையுடன் சென்றுவிடுகின்றனர். ஆனால் குறை மாத பிரசவம், பிரசவத்தின்போது குழந்தைக்கு ஏற்படும் மூச்சுத் திணறல், வலிப்பு, முக்கிய உறுப்புகள் முதிர்ச்சி அடையாத நிலையில் பிறக்கும் எடை குறைந்த குழந்தைகள், குவளைநீரால் புரையேறுதல், தொப்புள்கொடி கழுத்தைச் சுற்றிக்கொள்ளும் நேர்வுகள், கருப்பையில் வளர்ச்சி குன்றிய குழந்தை மற்றும் இதர காரணங்களினால் சில நேர்வுகளில் உயிருக்குப் போராடும் நிலையில் சில பிரசவங்கள் நிகழ்கின்றன.

இப்படி பிறக்கும் சிசுக்களைக் காப்பாற்றும் நோக்கத்துடன்தான் தமிழகத்தில் 64 பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் 114 பச்சிளம் குழந்தைகள் நிலைப்படுத்தும் பிரிவு போன்ற மையங்கள் நல்லமுறையில் செயல்பட்டு வருகின்றன. ஏற்கனவே சுட்டிக்காட்டியவாறு, பல்வேறு காரணங்களினால் உயிருக்குப் போராடும் நிலையில் உள்ள பச்சிளம் குழந்தைகளுக்கு தீவிர சிசிக்சை அளிப்பதற்காகத்தான் இந்த மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இதுபோன்ற குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகள், இந்த மையங்கள் துவங்குவதற்கு முன்பாக, உயர் சிகிச்சைக்கு வழியின்றி இருந்த நிலமையை மாற்றி, அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி, பச்சிளம் குழந்தைகளை காப்பாற்றுகின்ற உயர் சிகிச்சை மையங்கள் தான் இந்த 24x7 மணிநேரமும் செயல்படும் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை மையங்கள் ஆகும். இவை மட்டுமன்றி, தனியார் மருத்துவமனைகளில் பிரசவித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள இத்தகைய குழந்தைகளைக் கடைசி நேரத்தில் தாங்கிப் பிடிக்கும் கரங்களாக இந்த மையங்கள் செயல்படுகின்றன. இதன் பயனாக இறக்கும் நிலையில் வரும் பச்சிளம்குழந்தைகளில் 90 விழுக்காட்டிற்கு மேல் காப்பாற்றப்பட்டு வருகின்றனர்.

எடுத்துக்காட்டாக, பச்சிளங்குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவின் காரணமாக சிசு மரண விதிகம் படிப்படியாக தருமபுரி மாவட்டத்திலும் குறைந்து வந்துள்ளது. குறிப்பாக, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் இந்த மருத்துவமனை மட்டும் அல்லாது, மாவட்டத்தின் இதர பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகள் மற்றும் இதர மாவட்டங்களிலிருந்தும் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைக்காக சேர்க்கப்படுகின்றன. சிசு இறப்பு விகிதத்தைப் பொறுத்தவரை ஒரு மாவட்டத்திலுள்ள தீவிர சிகிச்சைப் பிரிவின் இறப்பு விகிதத்தை மட்டும் தனியாக கணக்கீடு செய்வது ஒரு தவறான கணக்கீட்டு முறையாகும். ஏனென்றால், சிசு மரண விகிதம் ஒரு பகுதியில் உள்ள குறியீடாகுமே தவிர ஒவ்வொரு மருத்துவமனையின் குறியீடு அல்ல.

பிரசவத்தின்போது சிசு மரணம் என்பது உலகளாவிய நிகழ்வு. வளர்ந்த மேலைநாடுகளில் எல்லாம் கூட இது தவிர்க்க முடியாததாக உள்ளது. தருமபுரி மாவட்டத்தில், 2006ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரையில் 3353 சிசு மரணங்கள் நிகழ்ந்துள்ளன. சராசரியாக ஒரு வருடத்தில் 671 சிசு மரணங்கள் நிகழ்ந்தன. அதாவது, சராசரியாக மாதம் ஒன்றுக்கு 56 சிசு மரணங்கள் நிகழ்ந்தன. 2011ஆம் ஆண்டு முதல் இதுநாள் வரை 1834 சிசுக்கள் இறந்துள்ளன. அதாவது, கடந்த மூன்றரை ஆண்டுகளில் ஒரு வருடத்திற்கு சராசரியாக 512 ஆகவும், மாதம் ஒன்றுக்கு சராசரியாக 42 ஆக குறைந்துள்ளன.

சிசு மரணம் என்பது மனதிற்கு வேதனையளிக்கும் நிகழ்வாகும். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தங்களால் இயன்ற வரை இறுதிவரை போராடியும், தவிர்க்க இயலாத தருணங்களில் இறப்பு நிகழ்கின்றது. இருப்பினும், சிசு மரண விகிதத்தை மேலும் குறைக்க அரசு தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசின் பல்வேறு நடவடிக்கைகளால், தருமபுரி மாவட்டத்தில், 2006ல் 30 ஆக இருந்த சிசு மரண விகிதம், தற்போது 18.9 ஆக குறைந்துள்ளது.

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 186 மருத்துவர்கள், 243 செவிலியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். தற்போது பச்சிளம்குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் 30 செவிலியர்கள் தனிக் கவனம் செலுத்திவருகிறார்கள். இந்தப் பிரிவுக்கு பல்வேறு காரணங்களால் சிகிச்சைக்கு வரும் குழந்தைகளைப் பொறுத்து தேவைக்கேற்ப இம்மருத்துவமனையில் 45 வார்மர்கள், 10 போட்டோதெரபி மற்றும் 20 வென்டிலேட்டர்கள் வசதி உள்ளது. மேலும் 3 வென்டிலேட்டர் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன்கூடிய அவசர ஊர்திகளும்

அம்மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. தருமபுரி மையம், கடந்த 2012-13ம் ஆண்டில் சிறப்பான மையத்திற்கான விருதைப் பெற்று சீரிய முறையில் செயல்பட்டு வருகிறது.

பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவைப் பொறுத்தவரை அங்கு முறையான பயிற்சியும் அனுபவமும் மிக்க மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டு பணிபுரிகின்றார்கள். இங்கு மட்டுமின்றி, தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளின் எந்தவொரு தீவிர சிகிச்சைப் பிரிவிலும் அனுபவம் இல்லாத மருத்துவர்களோ, செவிலியர்களோ பணிபுரிகிறார்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை.

இந்நிலையில், சேவை மனப்பான்மையுடன் பணிபுரியும் அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் மனதை புண்படுத்தும் வகையில் அறிக்கை தருவது, அறிக்கை தருபவர்களின் அனுபவமின்மையை காட்டுகிறது.

மருத்துவ துறை என்பது மகத்தான சேவை துறை ஆகும். இந்த சேவை குறித்து வெற்று அறிக்கைகள் மூலம் அரசியலாக்கி யாரும் ஆதாயம் தேட முயற்சிக்க வேண்டாம். தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில்அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் தொடர்ந்து தீவிரக் கண்காணிப்பில் உள்ளனர். 15.11.2014 முதல் இன்றைய தேதி வரை இம்மையத்தில் 101 பச்சிளம்குழந்தைகள் முழுமையான மருத்துவ சிகிச்சைக்குப் பின் ஆரோக்கியத்துடன் வீடு திரும்பியுள்ளனர்.

சென்னை, எழும்பூர்அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் இருந்து அனுப்பப்பட்டுள்ள மருத்துவர்கள் குழுவும், மருத்துவக் கல்வி இயக்குநரும் தொடர்ந்து அங்கு முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர்.

பச்சிளம் குழந்தைகளை தாயுள்ளத்தோடு பராமரித்து பாதுகாக்கும் மக்களின் முதல்வர் ஜெயலலிதாவின் வழிகாட்டுதலோடு செயல்படும் மக்கள் நல்வாடிநவுத்துறை, தாயின் பரிவோடு சேவையை தொடர்ந்து செயலாற்றி வருகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT