தமிழகம்

தாமிரபரணியில் ஒரே நாளில் 7 டன் குப்பைகள் அகற்றம்: 5 கி.மீ. தூரம் பொலிவு பெற்றது நதிக்கரை - கல்லூரி மாணவிகள், தன்னார்வலர்கள் திரண்டு சுத்தப்படுத்தினர்

செய்திப்பிரிவு

தாமிரபரணியை சுத்தப்படுத்தும் பணியை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார். 20 கல்லூரிகளைச் சேர்ந்த 1,500 மாணவ, மாணவிகள் மற்றும் தன்னார்வலர்கள் 2 ஆயிரம் பேர் திரண்டு இப்பணியில் ஈடுபட்டனர். ஒரேநாளில் 7 டன் குப்பைகள் அகற்றப்பட்டு, ஆற்றின் இருபுறக் கரைகளும் பொலிவு பெற்றன.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற சந்தீப் நந்தூரி, தாமிரபரணி ஆற்றின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்தார். இதற்காக, அண்ணா பல்கலைக்கழகம் மூலம் வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டது. கல்லூரி மாணவ, மாணவிகள், தனியார் நிறுவனங்கள் பங்களிப்புடன் ‘மிஷன் கிளீனப் தாமிரபரணி- 2017’ என்ற பெயரில் தாமிரபரணி நதிக் கரையை சுத்தப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இப்பணியை ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேற்று தொடங்கிவைத்தார்.

5 கிலோமீட்டர் தொலைவுக்கு

திருநெல்வேலி மாநகருக்குள் 10 கிலோமீட்டர் தொலைவு தாமிரபரணி பாய்கிறது. இதில் முதல்கட்டமாக 5 கிலோமீட்டர் தொலைவுக்கு ஆற்றின் இரு கரைகளையும் சுத்தப்படுத்தும் பணி நேற்று தொடங்கியது. இதற்காக கரைப்பகுதி 22 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு கல்லூரிக்கும் ஒதுக்கப்பட்டது. தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் சுத்தப்படுத்தும் பணியை கல்லூரி மாணவ, மாணவிகள் மேற்கொண்டனர்.

பல்வேறு தனியார் நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்களும் இப்பணியில் கைகோத்து, சுத்தப்படுத்தும் பணிக்கான உபகரணங்கள், மாணவ, மாணவிகளுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்டவற்றை வழங்கினர். மாணவ, மாணவிகள் ஆற்றில் இறங்குவதைத் தடுக்க தீயணைப்புத் துறையினர் ரப்பர் படகு மூலம் ரோந்து வந்தனர். காலை 7 மணி முதல் 11 மணி வரை சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்றன.

தொடர்ந்து, ஆட்சியர் அலுவலகம் அருகே தாமிரபரணி நதிக்கரையில் அமைக்கப்பட்ட மேடையில் கலைநிகழ்ச்சி கள் நடந்தன. ஆற்றங்கரையை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள் சிலம்பம், வாள்வீச்சு, நடனம், நாடகம் என பல்வேறு கலைநிகழ்ச்சிகளை நடத்தினர். சுத்தப்படுத்தும் பணியில் பங்கேற்ற கல்லூரிகளுக்கு நினைவுப் பரிசு வழங்கி ஆட்சியர் கவுரவித்தார். அவர் பேசும்போது, “தாமிரபரணியை சுத்தப்படுத்தும் பணிக்காக மாணவர்கள் அதிகாலை 5.30 மணியில் இருந்தே வரத் தொடங்கிவிட்டனர். மாணவ, மாணவிகளால் சீரமைக்கப்பட்ட பகுதியை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. அனைத்து பணிகளுக்கும் அரசாங்கத்தை எதிர்பார்க்கக் கூடாது. மக்களுக்கும் பொறுப்புணர்வு வேண்டும். நமது சுற்றுப் புறத்தையும், வளங்களையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும் என்றார்.

முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தாமிரபரணியை சுத்தப்படுத்தும் பணியில் 20 கல்லூரிகளைச் சேர்ந்த 1,500 மாணவ, மாணவிகள், பல்வேறு அரசுத் துறை ஊழியர்கள், மாநகராட்சி ஊழியர்கள், தன்னார்வலர்கள் என மொத்தம் 2 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இதன் மூலம் ஒரே நாளில் 7 டன் குப்பை அகற்றப்பட்டுள்ளது. மாதம் ஒரு நாள் தாமிரபரணியை சுத்தப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெறும். ஆற்றில் குப்பைகளை கொட்டக் கூடாது. திறந்தவெளியில் இயற்கை உபாதைகளை கழிக்கக் கூடாது என நதிக்கரையோரம் வசிக்கும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதற்கு மக்களிடம் நல்ல ஆதரவு உள்ளது. சுத்தப்படுத்தும் பணி முழுமையாக முடிந்த பின்னர் தாமிரபரணியை தொடர்ந்து பராமரிக்க ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆலோசனை வழங்கலாம்

தாமிரபரணியில் ஒரு பகுதி நெல்லையில் தீவுபோல் உள்ளது. இங்கு பறவைகள் அதிகமாக வருகின்றன. இதை சரணாலயம்போல் மாற்றி பராமரிப்பது குறித்து பரிசீலிக்கப்படும். சுத்தப்படுத்தப்பட்ட பகுதியில் பூங்கா உருவாக்கி பராமரிப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். நதிக்கரையை சுத்தமாக வைத்திருக்க தகுந்த ஆலோசனைகளை மக்களும், தொண்டு நிறுவனங்களும், மாணவ, மாணவிகளும் வழங்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், சேரன்மகாதேவி சார் ஆட்சியர் ஆகாஸ், உதவி ஆட்சியர் (பயிற்சி) இளம் பகவத், மாநகராட்சி ஆணையாளர் சிவசுப்பிரமணியன், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் பழனி, கோட்டாட்சியர் மைதிலி, அண்ணா பல்கலைக்கழக நெல்லை மண்டல முதல்வர் சக்திநாதன் கலந்து கொண்டனர்.

ஆட்சியருடன் செல்பி எடுக்க ஆர்வம்

நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆட்சியருடன் செல்பி எடுத்துக்கொள்ள மாணவ, மாணவிகள் ஆர்வம் காட்டினர். தாமிரபரணியை சுத்தப்படுத்தும் பணியை தொடங்கியுள்ள ஆட்சியருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT