தமிழகம்

வண்ணாரப்பேட்டை ரயில் நிலையத்தில் மாணவர்கள் மோதல் - 3 பேருக்கு கத்திக்குத்து

செய்திப்பிரிவு

வண்ணாரப்பேட்டை ரயில் நிலையத்தில் தியாகராயா கல்லூரி மாணவர்கள் 3 பேரை, மாநிலக் கல்லூரி மாணவர்கள் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றனர்.

சென்னை கடற்கரை ரயில் நிலை யத்தில் இருந்து பட்டாபிராமுக்கு நேற்று மதியம் 2 மணியளவில் மின்சார ரயில் சென்றது. ரயிலில் மாநிலக் கல்லூரி மாணவர்கள் 10-க்கும் மேற்பட்டோர் இருந்தனர். வண்ணாரப்பேட்டை ரயில் நிலையத் துக்கு ரயில் வந்தபோது, நிலையத் தில் காத்திருந்த தியாகராயா கல்லூரி மாணவர்களுக்கும், மாநிலக் கல்லூரி மாணவர்களுக்கும் பயங்கர மோதல் ஏற்பட்டது.

அப்போது தியாகராயா கல்லூரி யின் முதலாம் ஆண்டு மாணவர்கள் லோகேஷ், அஜய், வடிவேல் ஆகியோரை மாநிலக் கல்லூரி மாணவர்கள் கத்தியால் குத்தினர். இதைத் தடுக்க முயன்ற பயணிகள் 2 பேரையும் மாநிலக் கல்லூரி மாணவர்கள் தாக்கினர். பின்னர் மாநிலக் கல்லூரி மாணவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

கத்திக்குத்தில் காயம் அடைந்த 3 மாணவர்களும் ரத்தம் வடிந்த நிலையில் ரயில் நிலையத்திலேயே இருந்தனர். சம்பவ இடத்துக்கு வந்த ரயில்வே போலீஸார் 3 பேரையும் மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்தச் சம்பவம் குறித்து ராயபுரம் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT