தமிழகம்

ஷீரடி, காசிக்கு ஆன்மிக சிறப்பு ரயில்கள்: ஐஆர்சிடிசி அறிவிப்பு

செய்திப்பிரிவு

ஷீரடி, மந்த்ராலயம், காசிக்குச் செல்ல தமிழகத்தில் இருந்து ஐஆர்சிடிசி சார்பில் ஆன்மிக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இது தொடர்பாக ஐஆர்சிடிசி அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்திய உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் (ஐஆர்சிடிசி) பல்வேறு விதமான சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல, கடந்த 2005-ம் ஆண்டு முதல் சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. குறிப்பாக பாரத தர்ஷன் ஆன்மிகச் சுற்றுலா, ரயில் சுற்றுலா, எல்டிசி பேக்கேஜ், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக கல்விச் சுற்றுலா செல்ல சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், வரும் ஆகஸ்ட் 9-ம் தேதி மதுரையில் இருந்து சென்னை சென்ட்ரல் வழியாக ஷீரடிக்கு ஆன்மிக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மதுரையில் இருந்து புறப்பட்டு திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, சென்னை சென்ட்ரல் வழியாக ஷீரடி, பண்டரிபுரம், மந்த்ராலயம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 7 நாட்கள் கொண்ட இந்த யாத்திரைக்கு ஒருவருக்கு ரூ.5,880 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், ஆகஸ்ட் 18-ம் தேதி மதுரையில் இருந்து சிறப்பு ரயில் புறப்பட்டு திண்டுக்கல், ஈரோடு, சேலம், சென்னை வழியாக காசி செல்கிறது. காசியில் விஸ்வநாதரை தரிசிக்கவும், கயாவில் முன்னோர்களுக்கு மரியாதை செலுத்தவும், ஹரித்துவாரில் மானசதேவியை தரிசிக்கவும், டெல்லி குதுப்மினார், இந்தியா கேட், ராஜ்காட், மதுராவில் கிருஷ்ண ஜென்ம பூமியை தரிசிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 12 நாட்கள் கொண்ட இந்த யாத்திரைக்கு ஒருவருக்கு ரூ.11,340 கட்டணமாகும். இதில், கட்டணம், சைவ உணவு, தங்கும் வசதி உள்ளிட்டவை அடங்கும். இது தொடர்பாக மேலும் தகவல்களைப் பெற 9003140714 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT