மக்கள் மனதார கைதொழும் வகையில் சேவையாற்றும் அனைத்து மருத்துவர்களுக்கும் தேசிய மருத்துவர் தினத்தில் எனது நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
தேசிய மருத்துவர் தினத்தை முன்னிட்டு ஸ்டாலின் இன்று வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ''உயிர் காக்கும் உன்னதமான பணியில் தங்களை அர்ப்பணித்து கொண்டுள்ள மருத்துவர்கள் அனைவருக்கும் தேசிய மருத்துவர் தினத்தை முன்னிட்டு எனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏழை - பணக்காரர் என்ற பாகுபாடின்றி, உயர்ந்தோர் - தாழ்ந்தோர் என்ற வேறுபாடின்றி, எல்லா உயிர்களையும் தம் உயிர்போலக் கருதி செயலாற்றும் டாக்டர்களுடைய பணி போற்றுதலுக்குரியது.
மக்கள் நலன் காக்கும் மருத்துவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் திமுக எப்போதும் முன் நிற்கிறது. தலைவர் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில் தமிழகத்தின் பல பகுதிகளிலும் அரசு மருத்துவக் கல்லூரிகள், புதிய அரசு மருத்துவமனைகள், தரம் உயர்த்தப்பட்ட வார்டுகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவை உருவாக்கப்பட்டு நவீன சிகிச்சை முறைகள் எளிதில் கிடைக்க வசதிகள் செய்யப்பட்டன.
உயிர் காக்கும் உயர் மருத்துவ சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத்திட்டத்தின் வாயிலாக ஏழைகளுக்கும் அனைத்து வகையிலான உயர் தரமான சிகிச்சைகளும் கிடைக்க வழி செய்தது திமுக அரசு. 108 ஆம்புலன்ஸ் சேவையின் வாயிலாக பல உயிர்கள் காப்பாற்றப்பட்டன. இந்த உன்னதப் பணியில் செயலாற்றும் மருத்துவர்கள் மீதான வன்முறைகளைத் தடுத்து நிறுத்தும் வகையிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கானக் கட்டமைப்புகளைப் பெருக்குவதற்காக அரசாங்கத்தின் அனுமதி தொடர்பாக வெளிப்படைத்தன்மையும் விரைவாக நிறைவேற்றும் சூழலும் திமுக ஆட்சியில் அமைந்தன.
தற்போது, மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தினைக்கூட இன்றைய ஆட்சியாளர்கள் சரியாக செயல்படுத்தாத காரணத்தால் ஏழை நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள். அவர்களுக்குரிய சிகிச்சையை அளிக்க முடியாத கையறு நிலையில் டாக்டர்கள் இருக்கிறார்கள். அதுபோலவே மருத்துவமனை கட்டுமானம்-உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான அரசின் ஒத்துழைப்பும் பல்வேறு நோக்கங்களுக்கான இழுத்தடிக்கப்படுகிறது. ஏழைகளின் உயிருடன் விளையாடும் இந்த அபாய விளையாட்டைத் தவிர்த்து, டாக்டர்கள் தங்கள் சேவையினைத் தொடர்வதற்கு ஆட்சியாளர்கள் ஒத்துழைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
கிராமப்புறங்களிலிருந்து ஏழ்மையான சூழலில் படித்து வளர்ந்து டாக்டராக நினைப்பவர்களின் கனவுகளை முறியடிக்கும் நீட் தேர்விலிருந்து விலக்குப் பெறுவதற்கான சட்டபூர்வ நடவடிக்கையையும் இந்த அரசு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன். மக்கள் மனதார கைதொழும் வகையில் சேவையாற்றும் அனைத்து மருத்துவர்களுக்கும் தேசிய மருத்துவர் தினத்தில் எனது நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்'' என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.