தமிழகம்

சென்னைக்கு குடிநீர் தரும் புழல் ஏரி 13 ஆண்டுகளுக்குப் பிறகு வறண்டது

செய்திப்பிரிவு

சென்னைக்கு குடிநீர் தரும் முக்கிய ஏரிகளில் ஒன்றான புழல் ஏரி 13 ஆண்டுகளுக்கு பிறகு வறண்டது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி, சோழவரம், புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகள் சென்னையின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை சரிவர பெய்யாமை, கிருஷ்ணா நீர் நிறுத்தம், வறட்சி ஆகிய காரணங்களால் கடந்த 4 மாதங்களுக்கு முன்பே இந்த ஏரிகளின் பெரும் பகுதி வறண்டு காணப்பட்டன. ஆகவே நீர் மட்டமும் வேகமாகக் குறைந்து வந்தது.

நேற்றைய நிலவரப்படி, 11, 057 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளின் 108 மில்லியன் கனஅடி நீர் இருப்பு மட்டுமே உள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 17-ம் தேதி இந்த ஏரிகளின் நீர் இருப்பு 3,757 மில்லியன் கன அடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சோழவரம் ஏரிக்கு அடுத்து புழல் ஏரியும் நேற்று முற்றிலும் வறண்டு விட்டது. ஆகவே, 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீர் இருப்பு வெறும் பூஜ்ஜியம்தான்.

அதேநேரத்தில், ஆங்காங்கே குட்டை போல் தேங்கியுள்ள நீரை விநாடிக்கு 20 கன அடி அளவு மோட்டார் மூலம் உறிஞ்சி வருகிறது சென்னைக் குடிநீர் வாரியம். இதுகூட இன்னும் 4 நாட்கள் வரைதான் நீடிக்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 2004-ம் ஆண்டு புழல் ஏரி இதேபோல் வறண்டது என அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். 13 ஆண்டுகளுக்குப் பிறகு வறண்டுள்ள புழல் ஏரியை ஒருவித ஏக்கத்துடனே மக்கள் பார்த்துச் செல்கின்றனர்.

SCROLL FOR NEXT