சென்னை ஆர்கே நகர் தொகுதியில் தேர்தல் நடத்துவது குறித்து ஆணையம் விரைவில் முடிவெடுக்கும் என்று இன்றுடன் பணி ஓய்வு பெறும் நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தெரிவித்தார்.
கடந்தாண்டு தமிழக சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில் ஆர்கே நகர் தொகுதியில் போட்டியிட்டு வென்று எம்எல்ஏவான முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்தாண்டு டிசம்பர் 5-ம் தேதி மறைந்தார். இதனால் அவர் வெற்றி பெற்ற ஆர்கேநகர் தொகுதி காலி என அறிவிக்கப்பட்டது.
கடந்த ஏப்ரல் மாதம் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில்வாக்காளர்களுக்கு அதிகளவில் பணம் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. வருமான வரித்துறையினர் சோதனையில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதால் ஏப்ரல் 9-ம் தேதி தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதற்கிடையில், ஆர்கே நகர் இடைத்தேர்தல் குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தெரிவித்துள்ளார். இன்றுடன் அவர் பணி ஓய்வு பெறும் நிலையில், புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக தேர்தல் ஆணையர்களில் ஒருவரான, அக்சல் குமார் ஜோதி பொறுப்பேற்க உள்ளார்.
இந்நிலையில், செய்தி நிறுவனத்துக்கு நஜீம் ஜைதி நேற்று அளித்த பேட்டியில், ஆர்கேநகர் இடைத்தேர்தலின்போது வாக்காளர்களுக்கு அதிகளவில் பணம் கொடுக்கப்பட்டதால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரியுடன் ஆலோசித்து, அந்த தொகுதியில், வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதை முழுமையாக தடுக்கும் விதமாக என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கலாம் என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆய்வு விரைவில் முடியும். முடிந்ததும், ஆணையம் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிடலாம் என்று அவர் தெரிவித்தார்.