தமிழகம்

ஓய்வுபெறும் நாளில் தமிழக டிஜிபிக்கு பணி நீட்டிப்பு: அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

டிஜிபி டி.கே.ராஜேந்திரனுக்கு பணி நீட்டிப்பு வழங்கியதற்கு எதிரான வழக்கில் பணி நீட்டிப்பு வழங்கியது, குட்கா விற்பனைக்கு லஞ்சம் வாங்கியது தொடர்பான வருமானத் துறையின் கடிதம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தமிழக டிஜிபியாக பணிபுரிந்த டி.கே.ராஜேந்திரனுக்கு ஓய்வு பெறும் நாளில் மேலும் 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இதை ரத்து செய்யக்கோரி மதுரை மாவட்ட ஏஐடியூசி செயலர் கே.கதிரேசன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநலன் மனு தாக்கல் செய்துள்ளார்.

டிஜிபியாக இருந்த டி.கே.ராஜேந்திரன் மீது தடை செய் யப்பட்ட குட்கா, பான்பராக் போன்றவற்றை சட்டவிரோதமாக விற்பனை செய்ய பெருந் தொகை லஞ்சம் வாங்கியதாக வருமான வரித் துறை குற்றம்சாட்டியுள்ளது.

வருமான வரித்துறை கடிதம்

இந்த குற்றச்சாட்டு தொடர்பாக நடவடிக்கை கோரி தலைமைச் செயலருக்கு வருமானவரித் துறை கடிதம் அனுப்பியுள்ளது. எனவே டி.கே.ராஜேந்திரனுக்கு பணி நீட்டிப்பு வழங்கி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தும், அவர் மீதான புகார் தொடர்பான விசாரணையை லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் இருந்து சிபிஐக்கு மாற்றவும், சிபிஐ போலீஸார் சிறப்பு படை அமைத்து விசாரிக்கவும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

நீதிமன்றத்தின் கடமை

இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: அரசின் உயர் பதவியில் ஒருவரை நியமனம் செய்யும்போது அவர் அந்த நியமனத்துக்கான அனைத்து தகுதிகளையும் பெற்றுள்ளாரா? அவர் எந்த வழிமுறைகளின் அடிப்படையில் அந்த பதவியில் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பதை நீதிமன்றம் ஆய்வு செய்யலாம். மேலும் உயர் பதவி நியமனங்கள் வெளிப்படையாக, நியாயமாக, பாரபட்சம் இல்லாமல், சரியான நடைமுறைகளைப் பின்பற்றி நடைபெற்றுள்ளதா என்பதை ஆய்வு செய்வது நீதிமன்றத்தின் கடமை.

இந்த வழக்கில் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் மீது மனுதாரர் கடுமையான குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார். ஆனால் அந்த குற்றச்சாட்டுகளை ஆராய தேவையான ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை. இருப் பினும் இதுபோன்ற உயர்பதவி நியமனங்களில் பிரச்சினை ஏற்படும்போது தனிநபர் நலனை விட நிறுவனத்தின் நலனே முக்கியம்.

10-ம் தேதி தாக்கல்

எனவே இந்த வழக்கு தொடர் பான அனைத்து ஆவணங்க ளையும் தாக்கல் செய்ய தலைமைச் செயலர், வருமான வரித் துறை தலைமை ஆணையர், லஞ்ச ஒழிப்பு இயக்குநர் ஆகியோருக்கு உத்தரவிடப்படுகிறது.

டிஜிபி டி.கே.ராஜேந்திரனுக்கு பணி நீட்டிப்பு வழங்கி பிறப்பித்த ஆவணங்களை தலைமைச் செயலரும், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை சட்டவிரோத மாக விற்பனை செய்ய லஞ்சம் வாங்கியது தொடர்பாக சம்பந்தப் பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்து தலைமைச் செயலருக்கு அனுப்பிய கடிதம் மற்றும் ஆவணங்களை வருமான வரித்துறை தலைமை ஆணையரும், வருமான வரித் துறையின் புகாரின்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திவரும் விசாரணை தொடர் பான ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநரும் நீதிமன்றத்தில் மூடி முத்திரையிட்ட கவரில் ஜூலை 10-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் அடுத்த விசாரணையை ஜூலை 12-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

SCROLL FOR NEXT