வீடுகளில் நாம் பல செல்லப் பிராணிகளை வளர்த்து வந் தாலும், நாய்களே நமக்கு உதவிகளை செய்வதில் முன் நிற்கின்றன. அதனால், நாய்கள் வளர்ப்பதில் எல்லோரும் ஆர்வம் காட்டுகின்றனர். பொதுவாக வீடுகளில் நாய்கள் காவலுக் காகவும், பொழுது போக்குக் காகவும் வளர்க்கப் படுகின்றன. காவல்துறை, ராணுவத்தில் பயிற்சி பெற்ற நாய்கள் விசாரணைக்கும், குற்றவாளிகளை பிடிக்கவும், பேரிடர் கால மீட்பு பணிகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன.
மோப்ப நாய்களில் பிளட் ஹவுண்ட், பீகில், அமெரிக்கன் பிட்டில் டெரியர், பார்டர் கூலி, ஜெர்மன் ஷெப்பர்டு, கோல் டன் ரீட்ரைவர், லேப்ரடார் உள்ளிட்டவையும், தேடல் நாய் வகைகளில் டாபர்மேன், பிளட் ஹவுண்ட், பெல்ஜியன் ஷெப்பர்டு, லேப்ரடார் உள்ளிட்டவையும் குறிப்பிடத்தக்கவை. பேரிடர் காலங்களில் மோப்ப நாய்களின் பணி முக்கியத்துவம் வாய்ந்தது.
வீடுகளில் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்கள் காவலுக்கு மட்டுமின்றி, தன்னுடைய எஜமானர்களின் உயிர் காக்கும் தோழனாகவும் இருக்கின்றன. அதனால், நாய்கள் பயன்பாட்டினை அதிகரிக்க, அதை பற்றிய ஆராய்ச்சி உலகளவில் தொடங்கி உள்ளது.
இதுகுறித்து மதுரை கொண்டையம்பட்டி கால்நடை பராமரிப்பு துறை மருத்துவர் மெரில்ராஜ் கூறியதாவது:
உலகிலேயே மோப்ப சக்தி மிகுந்த விலங்கு நாய்கள்தான். அதன் மோப்ப சக்தி மனிதர்களை ஒப்பிடும்போது 10 லட்சம் மடங்கு துல்லியமானது. உதாரணமாக ஒரு துளி ரத்தத்தை 5 லிட்டர் தண்ணீரில் கலந்தாலும், அதன் வாசனையை அறியும் திறன் கொண்டவை நாய்கள். அது மட்டும் இல்லாது, ஒவ்வொரு வாசனையையும் தனித்தனியே பிரித்து நுகரும் சக்தி கொண்டவை.
மனிதர்களின் மோப்பத் திறன் ஒரு வாசனையையோ அல்லது பல வாசனைகள் கலந்த கலவைப் பொருள்களின் மொத்த வாசனையையோ, ஒரு நேரத்துக்கு ஒன்றை மட்டுமே உணரக் கூடியதாக இருக்கிறது. நாய்களின் மூக்கினுள் வாசனையைக் கிரகிக்கும் நரம்பின் நுனி அமைந்துள்ள பரப்பு பல வளைவுகளாக மடக்கப்பட்டு சுருளாக பொருத்தப்பட்டுள்ளது. இதன் அளவு 60 சதுர அலகு ஆகும். ஆனால், மனிதனில் இது ஒரு சதுர அங்குலம் மட்டுமேயாகும்.
அது மட்டுமில்லாது உணர்வுகளை உணரச் செய்வது, பதியச் செய்யும் மூளைப்பகுதியின் அளவு மனிதர்களை காட்டிலும் நாற்பது மடங்கு அதிகம். நாயின் மூக்கின் நீளம் மற்றும் அகலத்தைப் பொறுத்து வாசனை உணரும் நரம்புக் கூறுகளின் எண்ணிக்கை வேறுபடுகிறது. மனிதர்களுக்கு 5 மில்லியன் நரம்பு நுனிகளும், டேஷண்டு வகை நாய்க்கு 125 லட்சம் நரம்பு நுனிகளும், ஜெர்மன் ஷெப்பர்டு வகை நாய்க்கு 225 மில்லியனும், பிளட் ஹவுன்டு வகை நாய்க்கு 300 மில்லியனும் இருக்கிறது.
நாய்கள் சாதாரணமாக சுவாசிக்கும்போது வாசனை எல்லா நரம்பு நுனிகளையும் அடைவதில்லை. ஆனால், அவை வாசனையை உணர முற்படும்போது, வாசனைத் துகள்கள் நரம்பு நுனிப் பரப்பை அடைந்து மூளைக்குச் சென்று மிகவும் ஆற்றலுடன் உணருகிறது.
நிலநடுக்கம், சுனாமி, பஞ்சம், வறட்சி, காட்டுத் தீ, நிலச்சரிவு, பனிச்சரிவு, மழை வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில், நாய்களின் பங்கு அளப்பரியது. பேரிடர் நிகழ்வை முன்கூட்டியே உணரும் தன்மை விலங்குகளுக்கு இயற்கை கொடுத்த வரம்.
அதனாலே பேரிடர் நிகழ்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பே, செல்லப் பிராணிகள் சில விசித்திரமான சமிக்ைஞகளை வெளிப்படுத்தும். உதாரணம், அமைதியின்றி இருத் தல், மனிதர்களை துரத்துதல், பதுங்குதல், மிரட்சியுடன் காணப் படுதல் போன்ற செயல்பாடுகளை வெளிப்படுத்தும். இதைப் பற்றிய ஆராய்ச்சிகள் ஆரம்ப நிலை யிலேயே இருக்கின்றன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
எஜமானர்களை காப்பாற்றும் நாய்கள்
பேரிடர் காலங்களில் இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட மனிதர்களை மீட்க நாய்கள் உதவுகின்றன. அப்போது போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்ட நிலையில் தகவல் தொடர்புக்கும் உதவுகின்றன. பேரிடர்கால நிகழ்வின்போது தன் எஜமானருக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் கொண்டுவர உதவுகின்றன. தன் எஜமானரை விஷ ஜந்துகள் தாக்குதலிலிருந்து காப்பாற்றுகின்றன.
சில நேரங்களில் பேரிடரில் சிக்கி தவிக்கும் ஆதரவற்ற முதியோர்களுக்கு அவர்கள் வளர்க்கும் செல்லப்பிராணிகள் ஊன்றுகோலாக நின்று உதவி செய்த நிகழ்வுகளும் வரலாற்றில் பதிவாகி உள்ளன.