தமிழகம்

மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகத்தில் சாவி உதவியால் நீராதாரம் கண்டறிந்த துணைவேந்தர்

என்.சன்னாசி

மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகத்தில் இரும்பு சாவி உதவி யால் நீராதாரத்தை துணை வேந்தர் பி.பி.செல்லத்துரை கண்டறிந்தார்.

மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் சுமார் 700 ஏக்கர் பரப்பளவு கொண்டது. குடியிருப்பு பகுதிகள், பல்வேறு துறைகள், அலுவலகப் பகுதிகள் ஆகியவற்றுக்கு தினமும் 4 லட்சம் லிட்டருக்கு மேல் தண்ணீர் தேவைப்படுகிறது. பல்கலைக்கழக வளாகத்தில் 12-க்கும் மேற்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் உள்ளன. இருப்பினும் வறட்சி காரணமாக ஆழ்துளை கிணறுகளில் தற்போது சரிவர தண்ணீர் கிடைக்கவில்லை.

ஒரு லட்சம் லிட்டருக்கு மேல் தண்ணீர் பற்றாக்குறை நிலவியது. இதற்காக வெளியில் இருந்து லாரிகள் மூலம் தண்ணீரை நிர்வாகம் விலைக்கு வாங்கி வருகிறது. தண்ணீர் பற்றாக்குறையால் பல்கலைக்கழக வளாத்தில் உள்ள பூங்கா, மரம், செடிகள் கருகியுள்ளன.

கடந்த 2 மாதங்களுக்கு முன், புதிய துணைவேந்தராக பி.பி. செல்லத்துரை பதவி ஏற்றார். அவர் தண்ணீர் பற்றாக்குறையைப் போக்க புதிய ஆழ்துளை கிணறுகளை அமைக்க ஏற்பாடு செய்தார். அவரே இரும்பு சாவியில், காப்பர் வயரை கட்டி, நீராதாரத்தைக் கண்டறிந்தார். துணைவேந்தர் பங்களா, மாணவர்கள் விடுதி, அலுவலர்கள் குடியிருப்பு உட்பட 6 இடங்களில் அவர் தேர்வு செய்த இடங்களில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் போதிய தண்ணீர் கிடைக்கிறது.

இது குறித்து துணைவேந்தர் பி.பி.செல்லத்துரை கூறியதாவது:

சில ஆண்டுகளுக்கு முன் விருதுநகரில் நண்பரின் தோட்டத்து கிணற்றில் நீரோட்டம் கண்டறிய பெரியவர் ஒருவர் வந்தார். அவர் வேப்பங்குச்சி, எலுமிச்சை பழம் மூலம் நீராதாரம் கண்டுபிடித்தார். அவரது ஆலோசனையின்பேரில் நான் உட்பட 5 பேர் சோதித்து பார்த்தோம். அதில் எனது முயற்சி வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் ஆழ்துளைக் கிணறு அமைக்க நீரோட்டம் கண்டறிந்து கொடுத்தேன். இதுவரை 300-க்கும் மேற்பட்ட இடங்களை தேர்ந்தெடுத்து தண்ணீர் எடுக்க உதவி இருக்கிறேன்.

இதன்படியே துணைவேந்தரான பின், பல்கலைக்கழக வளாகத்திலும், தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க நீராதாரம் கண்டுபிடித்தேன். முதலில் துணைவேந்தர் பங்களாவில் நீர்மட்டம் அறிந்து ஆழ்துளைக் கிணறு அமைத்தோம். இதில் 400 அடியில் இருந்து தண்ணீர் கிடைக்கிறது.

மாணவர்கள் விடுதி அருகே இரு ஆழ்துளைக் கிணறு, குடியிருப்பு நுழைவு கேட், குழந்தைகள் பூங்கா உட்பட 6 இடங்களில் புதிய ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டு தண்ணீர் எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதியில் அமைத்த ஆழ்துளைக் கிணற்றில் தண்ணீர் கிடைக்கிறது. இவற்றின் மூலம் பல்கலைக்கழக வளாகத்தில் தண்ணீர் பற்றாக்குறை நீங்கியது. மேலும் பயோ டெக்னாலஜி, பயாலஜி, முவ. அரங்கம் உட்பட தேவைப்படும் இடங்களில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்படும். தற்போதைய வறட்சி காரணமாக சுற்றுவட்டாரப் பகுதியிலும் இலவசமாக நீரோட்டம் கண்டறிந்து, விவசாயிகள், பொதுமக்களுக்கு உதவத் தயாராக உள்ளேன் என்றார்.

நீரோட்டம் கண்டறிவது எப்படி?

துணைவேந்தர் செல்லத்துரை மேலும் கூறுகையில், மனித உடலில் காந்த சக்தி உள்ளவர் இந்த ஆய்வு மேற்கொள்ளலாம். திண்டுக்கல் பூட்டுக்கு பயன்படுத்தும் இரும்புச் சாவியை எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் மேல் பகுதியில் உள்ள துளையில் 2 அடி நீளமுள்ள காப்பர் வயரின் மேல் பகுதியை நீக்கவிட்டு, சாவியோடு இணைக்க வேண்டும். வலது கையில் வயரை தொங்கவிடவேண்டும்.

வட கிழக்கு திசை நோக்கி நின்று சாவியை தொங்கவிட வேண்டும். நிற்கும் இடத்தில் தண்ணீர் இருந்தால் வயரில் இணைத்துள்ள சாவி சுழலும். குறைந்தளவு தண்ணீர் இருந்தால் லேசாகவும், அதிகமாக இருந்தால் வேகமாகவும் சாவி சுழலும்.எவ்வளவு ஆழத்தில் தண்ணீர் கிடைக்கும் எனவும் தெரியும். அவ்விடத்தில் வட்டமிட்டு போர்வெல் அமைத்தால் உறுதியாக தண்ணீர் கிடைக்கும். உடலில் காந்த சக்தி உள்ள அனைவரும் இதன் மூலம் நீரோட்டம் கண்டறியலாம் என்றார்.

SCROLL FOR NEXT