தமிழகம்

போடி அருகே குளங்களை தூர்வாரிய திமுகவினர்

செய்திப்பிரிவு

போடி அருகே குளங்களை தூர்வாரும் பணியில் விவசாயிகளுடன் இணைந்து திமுகவினர் ஈடுபட்டுள்ளனர்.

தேனி மாவட்டத்தில் கூடலூர், போடி, தேவாரம், கோம்பை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில், கடந்த 1999-ம் ஆண்டு கூடலூர் அருகே லோயர்கேம்ப் தலைமை மதகில் இருந்து தேவாரம் அருகே டி.ரெங்கநாதபுரம் வரை 41 கி.மீ. தூரத்துக்கு 18-ம் கால்வாய் திட்டத்தின் கீழ் கால்வாய் அமைக்கப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இக் கால்வாய் திட்டம் மேலும் 14 கி.மீ. தூரத்துக்கு நீட்டிக்கப்பட்டு போடி கொட்டக்குடி வரை அமைக்கப்பட்டது.

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 126 அடி வரை இருக்கும்பட்சத்தில், அக்டோபர் 1 முதல் 9-ம் தேதி வரை இக்கால்வாயில் வினாடிக்கு 279 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படும். இந்த தண்ணீர், தேவாரம், போடி, கோம்பை பகுதிகளில் உள்ள 44 குளங்கள் மற்றும் கண்மாய்களில் தேக்கிவைக்கப்படும். இதன் மூலம் நேரடியாக 4,614 ஏக்கர் விளைநிலங்களும், மறைமுகமாக 20 ஆயிரம் ஏக்கரும் பாசன வசதிபெறும். அப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக இப்பகுதியில் உள்ள பெரும்பாலான குளங்கள், கண்மாய்கள் தூர்வாரப்படவில்லை. இதனால் தண்ணீர் திறக்கும் காலத்தில் அல்லது கனமழை பெய்யும்போது, குறைந்த அளவிலான தண்ணீரையே தேக்கிவைக்க முடிகிறது. எனவே, குளங்கள், கண்மாய்களை தூர்வார வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் விவசாயிகளுடன் இணைந்து போடி மற்றும் சின்னமனூர் அருகே உள்ள சங்கராபுரம் கண்மாய், நாகலாபுரம் கவுண்டன்குளம், டோம்புச்சேரி நாகமணியம்மாள் கண்மாய் ஆகியவற்றை தூர்வாரும் பணியை தேனி மாவட்ட திமுகவினர் தொடங்கினர்.

இப்பணியை திமுக மாவட்ட பொறுப்பாளர் ஜெயக்குமார், முன்னாள் எம்எல்ஏ லெட்சுமணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். 3 ஜேசிபி இயந்திரங்கள், 20 டிராக்டர்கள் மூலம் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT