தமிழக காவல் துறையினருக்கு பதக்கப்படி, பணப்படி, வெகுமதி உயர்வு உட்பட பல்வேறு சலுகைகளை முதல்வர் கே.பழனிசாமி அறிவித்தார். இதுதொடர்பாக சட்டப்பேரவையில் 54 புதிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.
சட்டப்பேரவையில் காவல் துறை மானியக் கோரிக்கை மீது கடந்த 6, 7 ஆகிய தேதிகளில் விவாதம் நடந்தது. விவாதத்துக்கு முதல்வர் கே.பழனிசாமி நேற்று பதிலளித்து பேசினார். அப்போது அவர் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:
கோவை, சேலம், நாமக்கல், தரும புரியில் ரூ.12 கோடியே 48 லட்சத்தில் புதிய காவல் வட்டங்கள், காவல் நிலையங்கள் உருவாக்கப்படும். தமிழக காவல் துறையினருக்கு சைபர் அரங்கம் ரூ.3 கோடியே 71 லட்சத்தில் உருவாக்கப்படும். சென்னை பெருநகரில் போக்குவரத்து விதிகளை மீறுவோரை தண்டிக்க மின் ரசீது முறை ரூ.6 கோடியே 42 லட்சத்தில் நடைமுறைப்படுத்தப்படும்.
வெகுமதி உயர்வு
வீர தீர செயலுக்கான முதல்வர் காவல் பதக்கம் பெறுவோருக்கு பணப்படி ரூ.300-ல் இருந்து ரூ.900 ஆகவும், முதல்வர் காவல் பதக்கம் பெற்றவர்களுக்கு மாதாந்திர பதக்கப்படி ரூ.200-ல் இருந்து 300 ஆகவும் உயர்த்தப்படும். மெச்சத்தக்க பணிக்காக வழங்கப்படும் ரொக்கத் தொகை, டிஎஸ்பிக்களுக்கு ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரமா கவும், சார்பு ஆய்வாளர் முதல் ஆய்வாளர் வரை ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாகவும், 2-ம் நிலை காவலர் முதல் தலைமைக் காவலர் வரை ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரமாகவும் உயர்த்தப்படுகிறது. தொழில்நுட்பம், சிறப்பு சேவையில் சிறந்து விளங்கியவர்களுக்கான ரொக்கத் தொகை இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.
சாதனங்கள்
கலவரத்தின்போது காவலர்கள் பாதுகாப்புக்காக ரூ.5 கோடியில் 10 ஆயிரம் பாலிகார்பனேட் லத்திகள், தடுப்புக் கருவிகள், பைபர் தலைக் கவசம், உடல் பாதுகாப்பு கவசங்கள் வாங்கப்படும். 100 காவல் நிலையங் களில் சிசிடிவி சாதனங்கள் ரூ.2 கோடியே 50 லட்சத்தில் நிறுவப்படும். திருச்சி, புதுக்கோட்டை, நெல்லையில் ரூ.38.40 கோடியில் டிஜிட்டல் முறையிலான தகவல் தொடர்பு முறை நிறுவப்படும். சிசிடிவி சாதனங்களை ஆய்வு செய்யவும் டிஜிட்டல் சாட்சியங்களை ஆய்வு செய்யவும் ரூ.25 லட்சத்தில் மென்பொருள் வாங்கப்படும். சென்னை ஐஸ் ஹவுஸ் மகளிர் காவல் நிலையம், கானாத்தூர், பட்டாபிராம் மற்றும் கிருஷ்ணகிரி, திருப்பூர், சிவகங்கை, திருச்சி, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் 11 காவல் நிலையங்களுக்கான புதிய கட்டிடங்கள் ரூ.11 கோடியே 37 லட்சத்தில் கட்டப்படும்.பாதுகாப்பு பணியின்போது பயன்படுத்துவதற்காக 7 நடமாடும் கழிவறை வாகனங்கள், ரூ.86 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பில் வாங்கப்படும்.
கடித வெடிகுண்டு கண்டுபிடிக்கும் கருவிகள் ரூ.25 லட்சத்தில் வாங்கப் படும். கடலோர காவல்படை காவலர் களுக்கு 66 உயிர்க்காப்பு மேலட்டைகள் ரூ.9 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பில் வாங்கப்படும்.
மருத்துவ நல நிதி
தீயணைப்பு பணிகளில் ஈடுபடும் போது ஏற்படும் எதிர்பாரா பெரும் தீக்காயங்கள், கொடுங்காயங்களுக்கு சிகிச்சைக்கான செலவினங்களை ஈடு செய்ய, தனியாக ‘எதிர்பாரா மருத்துவ நல நிதி’ ரூ.50 லட்சத்தில் உருவாக்கப்படும். தீயணைப்பாளர் முதல் உதவி மாவட்ட அலுவலர் வரையிலான பணியாளர்களுக்கு இடர்படி ரூ.400-ல் இருந்து ரூ.800 ஆகவும், மாவட்ட அலுவலர்களுக்கு ரூ.450-ல் இருந்து ரூ.900 ஆகவும் உயர்த்தப்படுகிறது. நாமக்கல், விருதுநகர், கோவை, தூத்துக்குடி, விழுப்புரம், திருவாரூர் மாவட்டங்களில் 6 புதிய தீயணைப்பு நிலையங்கள் அமைக்கப்படும் என்பன உட்பட 54 புதிய அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டார்.