மதுரையில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் அனுமதி பெறாமல் பிளக்ஸ் போர்டுகள் வைத்தது தொடர்பான வழக்கில் எதிர் மனுதாரராக சேர்க்கப் பட்டிருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பெயரை நீக்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த பொதுநலன் மனு:
தமிழகத்தில் அனுமதி பெறாமல் பிளக்ஸ் போர்டுகள், பேனர்கள் அமைக்க உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இருப்பினும் சட்டவிரோதமாக பிளக்ஸ் போர்டு, பேனர் வைக்கப்படுவதை அதிகாரிகள் தடுப்பதில்லை. எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை ஒட்டி திண்டுக்கல்லில் 22.6.2017-ல் அமைச்சர் சீனிவாசன் பெயரில் அனுமதி பெறாமல் பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டன. இந்த போர்டுகளை அதிமுகவின் மற்றொரு பிரிவினர் கிழித்தனர். அதே இடத்தில் திண்டுக்கல் எஸ்பி துணையுடன் ஏற்கெனவே இருந்த போர்டை விட பெரியளவில் பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பும் வழங்க ப்பட்டது.
மதுரையில் 28.6.2016-ல் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை ஒட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி சார்பில் அதிமுகவினர் ஏராளமான இடங்களில் அனுமதி பெறாமல் பிளக்ஸ் போர்டுகள் வைத்தனர். சாலையில் பள்ளம் வெட்டி இந்த போர்டுகளை வைத்திருந்தனர்.
சட்டவிரோதமாக பிளக்ஸ் போர்டு வைத்தது தொடர்பாக ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை. தமிழகத்தில் முதலவர் உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் பிளக்ஸ் போர்டுகள் வைப்பதை ஊக்குவித்து வருகின்றனர். போலீஸாரும் நடவடிக்கை எடுப்பதில்லை.
இதனால் சட்டவிரோதமாக பிளக்ஸ் போர்டு வைப்பதை தடுக்காமல் வேடிக்கை பார்த்தது தொடர்பாக மதுரை, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள், மதுரை மாநகர் காவல் ஆணையர், திண்டுக்கல் எஸ்பி ஆகியோர் மீது நடவடிக்கை உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் தேவையில்லாமல் முதல்வர் எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ளார். மனுவில் இருந்து முதல்வரின் பெயர் நீக்கப்படுவதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பின்னர், இந்த மனு தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 24-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.