தமிழகம்

85 சதவீத உள்ஒதுக்கீடு அரசாணை ரத்தானதற்கு தார்மீகப் பொறுப்பேற்று அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும்: திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

மருத்துவ மாணவர்களுக்கு 85 சதவீத உள்ஒதுக்கீடு அரசாணை ரத்து செய்யப்பட்டதற்கு தார்மீக பொறுப்பேற்று அமைச்சர் விஜய பாஸ்கர் பதவி விலக வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி யுள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஒரே நாடு, ஒரே தேர்வு என்ற வல்லாதிக்க எண்ணத்தோடு திணிக்கப்பட்ட நீட் தேர்வினால் தமிழக மாணவர்கள் மிகப்பெரிய பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். மருத் துவம் படிக்க வேண்டும் என்ற அவர்களது கனவுக்கு மத்திய அர சும், தமிழக அரசும் வேட்டு வைத் திருக்கின்றன. நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி, தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட சட்ட முன் வரைவுக்கு குடியரசுத் தலைவரின் அனுமதியைப் பெறுவதில் தமிழக அரசு பெரும் தோல்வியைத் தழுவி இருக்கிறது.

மத்திய அரசு இழைத்த அநீதிக்கு எதிராகப் பொங்கி எழுந்திருக்க வேண்டிய அரசு, அதற்கு எதிராக ஒரு முணுமுணுப்பைக்கூட காட்ட அஞ்சுகிறது. தமிழகத்தின் உரிமை களை அடகு வைத்ததன் விளை வாக, உரிமைக்குரல் கொடுக்காமல் துரோகம் இழைத்துவிட்டது. தனது தவறை மறைப்பதற்காக, அடுத் தடுத்து பொய்யான வாக்குறுதி களை அரசு அளித்து வருகிறது.

மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத இடங்களை ஒதுக்கீடு செய்யும் வகையில் ஓர் அர சாணை வெளியிட்டு, மாணவர் களின் நலன்களை பாதுகாத்து விட்டதாக தம்பட்டம் அடித்துக் கொண்டது. அந்த அரசாணை சட்ட விரோதமானது என்று கூறி அதை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. சமூக நீதி உணர்வுக்கு மாறான, கிராமப்புற, அடித்தட்டு மாணவர்களை பாதிக்கக்கூடிய இத்தீர்ப்பு திருத்தி எழுதப்பட வேண்டும். அதற்குரிய சட்ட நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

நீட் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெற்றால், சுமார் 50 சதவீத இடங்களை சிபிஎஸ்இ பள்ளிகளில் படித்த மாணவர்கள் தட்டிச் செல்வர். பொதுப்பிரிவிலும்கூட, தங்கள் விகிதாச்சாரத்தைவிட பலமடங்கு அதிகமான இடங்களை முன்னேறிய வகுப்பினர் அபகரித்துக் கொள்ளும் சமூக அநீதிக்கு தமிழக அரசு உடந்தையாகப் போகிறதா?

மீண்டும் மீண்டும் பொய்யான நம்பிக்கைகளைத் தந்து கொண்டிருக்கின்ற தமிழக அரசு, பரிதவித்துக் கொண்டிருக்கிற மாணவர்களின் இதயங்களில் வேல் பாய்ச்சி வருகிறது. எப்போதும் இல்லாத பெரும் அச்சத்தையும் அவநம்பிக்கையையும் மாணவர் கள் நெஞ்சிலும், பெற்றோரிடத் திலும் ஏற்படுத்தியதற்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும். இந்த குளறுபடிகளுக்கு காரண மான மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், இதற்கு தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்.

தமிழகத்தின் ஒட்டுமொத்த உணர்வை வெளிப்படுத்தி, போதிய அழுத்தம் கொடுத்து, இனியும் காலங்கடத்தாமல், நீட் சட்டத்துக்கு குடியரசுத் தலைவரின் அங்கீகாரத்தைப் பெற தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், தமிழக மக்கள் இந்த மன்னிக்க முடியாத துரோகத்தை ஒருபோதும் மறக்கமாட்டார்கள்.

இவ்வாறு அறிக்கையில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT