பெருங்களத்தூரில் ரியல் எஸ்டேட் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி, அவரது கூட்டாளியை போலீஸார் 4 மணி நேரத்தில் கைது செய்தனர்.
சென்னை புதுப் பெருங்களத்தூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் ஐசக்ராஜ் (43). அதே பகுதியில் ரியல் எஸ்டேட் அலுவலகம் நடத்தி வருகிறார். நேற்று காலை 11 மணி அளவில் ஐசக்ராஜ் அலுவலகத்தில் இருந்தார். அப்போது பைக்கில் வந்த சிலர், ரியல் எஸ்டேட் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பிச் சென்றனர். இதில், அலுவலகத்தின் முன் பக்க கண்ணாடி உடைந்தது.
இதுகுறித்து, ஐசக்ராஜ் அளித்த புகாரின் பேரில் சேலையூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். புதுப்பெருங்களத்தூரைச் சேர்ந்த ஜெபசேகர் (35) என்பவர், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பெட்ரோல் குண்டு வீசியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ஜெபசேகர், அவரது கூட்டாளியான அதே பகுதியைச் சேர்ந்த பாண்டியன் (21) ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து சேலையூர் போலீஸார் கூறும்போது, ‘‘சேலையூர் காவல் நிலையத்தில் ரவுடிகளின் பட்டியலில் ஜெயசேகரின் பெயர் உள்ளது. சில நாட்களுக்கு முன்பு ஜெபசேகரின் தாயாருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. மருத்துவ செலவுக்கு பணம் இல்லாததால் ஐசக்ராஜிடம் பணம் கேட்டு அணுகியுள்ளார். ஆனால், அவர் பணம் கொடுக்கவில்லை. இதனால் கோபம் அடைந்த ஜெபசேகர், தனது கூட்டாளிகளுடன் சென்று ஐசக்ராஜ் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசியுள்ளார். தலைமறைவாக உள்ள அவரது மற்ற கூட்டாளிகளையும் விரைவில் கைது செய்வோம்’’ என்றனர். குற்றவாளிகளை 4 மணி நேரத்தில் கைது செய்த போலீஸாரை காவல் ஆணையர் பாராட்டினர்.