தமிழகம்

ராஜீவ் கொலை குற்றவாளி ரவிச்சந்திரனுக்கு பரோல் கோரி மனு: உள்துறை செயலருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

செய்திப்பிரிவு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலிருக்கும் ரவிச்சந்திரனை ஒரு மாத கால பரோலில் அனுப்ப உத்தரவிடக் கோரி அவரது தாயாரின் மனுவை பரிசீலித்து 2 வாரத்தில் தகுந்த உத்தரவை பிறப்பிக்க தமிழக உள்துறை செயலருக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து மதுரை மத்திய சிறைத்துறை கண்காணிப்பாளர் 3 வாரத்தில் பதில்மனு தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ராஜேஸ்வரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்துள்ளார். அதில், "எனது மகன் ரவிச்சந்திரன் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கடந்த 26 ஆண்டுகளாக நன்னடைத்தையுடன், தண்டனை கழிந்துவிட்ட நிலையிலும் சிறையில் உள்ளார்.

26 ஆண்டுகளில் 3 முறை மட்டுமே சாதாரண விடுப்பில் வந்துள்ளார். 20 ஆண்டுகள் கழித்து விடுதலையாவார் என்ற நம்பிக்கையில், எனது சொத்துக்களை பிரிக்கும் நோக்கில் அவரை 30 நாட்கள் சாதாரண விடுப்பில் விடுவிக்க கோரியதன் அடிப்படையில் 15 நாட்கள் விடுப்பில் வந்தார். ஆனால் அப்போது அவரோடு பாதுகாப்பிற்கு வந்த காவல்துறையினர் சொத்துப்பங்கீடு தொடர்பாக வழக்கறிஞர்களை சந்திக்கவோ, சொத்தை பார்வையிடவோ அனுமதிக்கவில்லை. தற்போது எனக்கு 62 வயதாகிவிட்ட நிலையில் அடிக்கடி நோய்வாய்படுகிறேன்.

எனவே சொத்து மற்றும் வேளான் விவகாரங்களை தனியாக கையாள இயலாத நிலையில் உள்ளேன். ராஜீவ்காந்தி கொலையில் தொடர்புடைய 7 பேரையும் விடுவிப்பது தொடர்பாக மத்திய அரசிற்கு தீர்மானம் நிறைவேற்றி கடிதம் அனுப்பியது. அதனை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு கடந்த 3 ஆண்டுகளாக எவ்வித முடிவும் எட்டப்படாமல் உள்ளது. எனது மகன் சாதாரண விடுப்பில் வந்து 2 ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையில், அவருக்கு பரோலில் செல்ல உரிமை உண்டு என தமிழக முதன்மை செயலர் எனக்கு கடிதம் அனுப்பியுள்ளார். கடந்த 2012ல் பரோலில் வந்த நிலையில் 2014-க்கு பிறகு பரோலில் வர தகுதி உண்டு. எனவே 26 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் எனது மகனை குடும்பத்தின் சொத்துப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக ஒரு மாதம் நீண்ட கால பரோலில் செல்ல அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சுந்தரேஷ், சதீஸ்குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் மனுவை பரிசீலித்து தமிழக உள்துறை செயலர் 2 வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க உத்தரவிட்டார். மேலும் மனுதாரரின் மனு குறித்து மதுரை சிறைத்துறை கண்காணிப்பாளர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.

SCROLL FOR NEXT