பகுதிநேர ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், காவல் துறையினரின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று பாமக தலைவர் ஜி.கே.மணி வலியுறுத்தி யுள்ளார்.
இது தொடர்பாக அவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடந்து வந்த நேரத்தில் தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், காவல் துறையினர், விவசாயிகள், வணிகர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல போராட்டங்களை நடத்தினர். ஆனால் அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. இதனால் அவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
பெருகிவரும் போராட்டங்கள்
தலைநகர் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் குடிநீருக்காக பெண்கள் போராடி வருகின்றனர். விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யும்படியும், கரும்பு விவசாயிகள், நிலுவைத் தொகை வழங்க வலியுறுத்தியும் போராடி வருகின்றனர். தமிழகத்தில் உள்ள 16,540 பகுதிநேர ஆசிரியர்கள் தங்களை முழுநேர ஆசிரியர்களாக உயர்த்தி ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
கடந்த 12-ம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த போராட்டத்தில் நானும் பங்கேற்றேன். போராட்டத்துக்கு முந்தைய நாள் அன்றும், போராட்டம் நடந்த நாளும் நான் கல்வித் துறையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நியாயமான அவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். இதையடுத்து பகுதிநேர ஆசிரியர் சங்க நிர்வாகிகளை பள்ளிக் கல்வித் துறை சார்பில் அழைத்துப் பேசினர். இதைத் தொடர்ந்து அன்று மதியமே போராட்டம் கைவிடப்பட்டது. சட்டப்பேரவை கூட்டத் தொடர் முடிந்திருந்தாலும் அரசு தரப்பில் பகுதிநேர ஆசிரியர்களை உடனடியாக அழைத்துப் பேச வேண்டும். அவர்களை முழு நேர ஆசிரியர்களாக உயர்த்தி, ஊதிய உயர்வு வழங்க வேண் டும்.
பணி வரம்பு தேவை
புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்ட முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழகத்தில் பெருகிவரும் மக்கள் தொகை மற்றும் குற்றங்களைக் கருதி காவல்துறையின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். காவல் துறையினருக்கு 8 மணி நேர பணி வரம்பு, 8 ஆண்டுகளுக்கு ஒருமுறை பதவி உயர்வு, ஊதியம் மற்றும் படிகள் உயர்வு வழங்க வேண்டும்.
காவல்துறை அமைச்சுப் பணியாளர்களின் கோரிக்கை களையும் நிறைவேற்ற வேண்டும். சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு ஜி.கே.மணி கூறினார்.
காவல்துறை அமைச்சுப் பணியாளர்களின் கோரிக்கையும் நிறைவேற்ற வேண்டும். சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களின் கோரிக்கை நிறைவேற்ற வேண்டும். குடிநீர் பிரச்சினையை போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.