பால்வளத்துறை சார்ந்தும், ஆவின் நிறுவனத்தில் இருக்கும் விஷயங்கள் குறித்தும் அறிய முயலாமல் இன்னும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வெகுளியாக இருப்பதும், பேசுவதும் எங்களுக்கு வேதனையாக இருக்கிறது என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத் தலைவர் பொன்னுசாமி கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''ஆவின் நிறுவனம் பாட்டிலில் இருந்து பாலினை பாக்கெட்டில் அறிமுகம் செய்த ஆண்டு முதலே 200மி.லி. மற்றும் 250 மி.லி. அளவுள்ள பால் பாக்கெட்டுகளை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விநியோகம் செய்து வருகிறது.
குறிப்பாக திருச்சி மாவட்டத்தில் 1980-ம் ஆண்டு ஒரு லிட்டர் ஆவின் பால் 2 ரூபாய் 80 பைசாவிற்கு பாக்கெட்டில் அறிமுகம் செய்த போது 250மி.லி. அளவுள்ள ஆவின் பால் 70 பைசா விலையில் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் வேலூர், திருவண்ணாமலை, சேலம், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 17 ஆண்டுகளுக்கு முன்பிருந்தும், கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 5ஆண்டுகளுக்கு மேலாகவும் 200மி.லி. மற்றும் 250 மி.லி. அளவுள்ள பால் பாக்கெட்டுகளை ஆவின் நிறுவனம் பால் முகவர்கள் மூலமாக பொதுமக்களுக்கு வழங்கி வந்துள்ளது.
சென்னையில் மட்டும் கடந்த ஓராண்டுக்கு முன் 250 மி.லி. அளவுள்ள பால் பாக்கெட்டுகளை ஆவின் நிறுவனம் அறிமுகம் செய்தது. பால் முகவர்கள் மற்றும் சில்லறை வணிகர்களிடையே போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால் அறிமுகம் செய்த சில நாட்களிலேயே அதன் உற்பத்தி நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எனவே பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளது போன்று திருச்சி உள்ளிட்ட சில மாவட்டங்களில் பரீட்சார்த்தமாக 200 மி.லி. மற்றும் 250 மி.லி. அளவுள்ள பால் பாக்கெட்டுகளை ஆவின் நிறுவனம் விநியோகம் செய்து வருகிறது என்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பான தகவலாகும்.
எங்களது துறை சார்ந்த அமைச்சர் பால்வளத்துறை சார்ந்தும், ஆவின் நிறுவனத்தில் இருக்கும் விஷயங்கள் குறித்தும் அறிய முயலாமல் இன்னும் வெகுளியாக இருப்பதும், பேசுவதும் எங்களுக்கு வேதனையாக இருக்கிறது.
தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேட்டுக் கொண்டால் எங்களது தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் அவரோடு இணைந்து ஆவின் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க தயாராக இருக்கிறது'' என்று பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.