தமிழகம்

நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றத்துக்கு சட்ட உதவி வழங்க தலைமை வழக்கறிஞர் மறுப்பு

செய்திப்பிரிவு

தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பை செல்லாது என அறிவிக்கக் கோரி ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றத்துக்கு சட்ட உதவி வழங்க மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் மறுத்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பு செல்லாது என்று அறிவிக்கக் கோரி அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியைச் சேர்ந்த பாண்டியராஜன் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அந்த மனுவில், "கடந்த பிப்ரவரி 18-ம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கை தீர்மானத்தை, செல்லாதது என அறிவிக்க வேண்டும். நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது ரகசிய வாக்கெடுப்பு நடத்த வைக்கப்பட்ட வேண்டுகோளை பேரவைத் தலைவர்

நிராகரித்திருக்க கூடாது என்ற அடிப்படையில், இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரகசிய வாக்கெடுப்பு வழியாக புதிய நம்பிக்கை கோரும் தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்" என அவர் கோரியிருந்தார்.

இந்த வழக்கு சில நாட்களுக்கு முன் விசாரணைக்கு வந்தபோது, நம்பிக்கை வாக்கெடுப்பை ரகசியமாக நடத்த வாய்ப்பில்லையா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அத்துடன் ஜுலை 11-ம் தேதியன்று வழக்கை விசாரிப்பதாகத் தெரிவித்ததோடு, சட்ட உதவிக்காக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வேணுகோபாலை நியமித்தனர், அத்துடன் அன்றைய தினத்தில் அவர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

சட்ட உதவி வழங்க மறுப்பு

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்துக்கு சட்ட உதவிகள் வழங்க மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது, ''ஓபிஎஸ் அணிக்கு சட்ட ஆலோசனை வழங்குவதால், இந்த வழக்கில் ஆஜராகி உதவிகள் வழங்க விருப்பமில்லை'' என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT