கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதைக் கண்டித்து பொதுமக்கள் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் குழாயில் இருந்து நேற்று (வெள்ளிக்கிழமை) கச்சா எண்ணெய் கசிவு ஏற்பட்டதால், அச்சமடைந்த கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராடியவர்களின் மீது போலீஸார் தடியடி நடத்தியதால் அப்பகுதி கலவர பகுதியாக மாறியது.
இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இன்று (சனிக்கிழமை) காலை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டவர்களை, நீதிபதிகள் 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டனர். அதன்பின்னர் அவர்கள் அனைவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி எண்ணெய்க் குழாயில் உடைப்பு ஏற்பட்ட இடத்துக்கு நேற்று மாலை சென்ற போலீஸார். |
கைதானவர்களின் மேல் பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல், அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்ததைக் கண்டித்து பொதுமக்கள் இன்று கடையடைப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் கதிராமங்கலத்தில் உள்ள 93 கடைகளும் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. கதிராமங்கலத்தில் ஐநூறுக்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
’மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்’
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை சனிக்கிழமை காலை 10 மணியளவில் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வுப் பணியில் ஈடுபட்டார். அப்போது மக்களிடம் பேசுவதற்குத் தயாராக இருப்பதாகவும், அவர்களின் கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்றும் உறுதியளித்தார்.
அத்துடன் கச்சா எண்ணெய் படலம் நிரம்பிய விவசாய நிலத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் மண்ணைக் கொட்டி, படலத்தை அகற்ற வேண்டும் என்று அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ரசாயன நெடி
கச்சா எண்ணெய் கசிந்ததால், அந்தப் பகுதி முழுவதும் பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் கலந்த ரசாயன நெடி வீசிவருகிறது. நேற்று மக்கள் கூடியிருந்த பகுதிகளில், இன்று சாமியானா பந்தல் அமைத்து அதிகாரிகள் அமர்ந்துள்ளனர். எண்ணெயை எடுத்துச் செல்லும் பணிகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளன. சம்பவ இடத்தை வட்டாட்சியர், வருவாய்த்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். அவர்களுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு அளிக்கின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் நேற்று ஓஎன்ஜிசி எண்ணெய்க் குழாயில் ஏற்பட்ட கசிவால் அருகில் உள்ள வயலில் பரவியுள்ள கச்சா எண்ணெய்ப் படலம். |
ஓஎன்ஜிசியின் எண்ணெய் எடுக்கும் இடத்துக்குச் செல்ல யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. அதிகாரிகள் மட்டுமே உள்ளே சென்று வருகின்றனர். போராட்டத்தின்போது சேதமான சாலையில் மண்ணைக் கொட்டி, அதைச் சமப்படுத்தும் பணியிலும் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.